'இந்த வயசுலேயே இப்படி ஒரு மோசடியா'?...'வசமாக சிக்கிய அரசு டாக்டரின் மகன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவரின் மகன் மோசடியில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். அரசு மருத்துவரான இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித் சூர்யா, மருத்துவராக வேண்டும் என்பதற்காக 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் தேர்வாகாத அவர்,  3 வது முறை இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை மராட்டிய மாநிலம் மும்பையில் எழுதியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 385 மதிப்பெண் பெற்றதாக கூறப்பட்ட உதித்சூர்யா, ஆதிதிராவிடர் இடஒதுக்கீட்டின் படி கவுன்சிலிங் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரிக்கு சென்று வந்த உதித் சூர்யாவுக்கு அசோக் என்ற பெயரில் வந்த மெயிலால் சிக்கல் வந்தது. கல்லூரிக்கு வந்த மெயிலில் ''உதித்சூர்யா என்ற பெயரில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பது போலியான நபர் என்றும், தேர்வு எழுதி கவுன்சிலிங்கில் பங்கு பெற்றவர் வேறு நபர் என்றும், தற்போது கல்லூரியில் படித்து வருபவர் வேறு நபர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மாணவன் உதித் சூர்யாவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் நீட் தேர்வு எழுதிய ஹால்டிக்கெட்டில் இருந்த போட்டோவும், மாணவரின் தற்போதைய தோற்றமும் வேறாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முறையான பதில் அளிக்காமல் கல்லூரியில் இருந்து வெளியேறிய உதித் சூர்யா, மன அழுத்தம் காரணமாக மருத்துவ படிப்பில் இருந்து விலகிக்கொள்வதாக மருத்துவ கல்வி இயக்குனகரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இதற்கிடையே ஆவணங்களில் உள்ள புகைப்படத்திற்கும் சேர்க்கைக்கு வந்த மாணவன் உதித் சூர்யாவின் தோற்றத்திற்கும் வேறுபாடு இருப்பதாக அதிகாரிகள் தேனி மருத்துவக் கல்லூரி டீனிடம் கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தற்போது சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் சர்ச்சை ஆனதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன், உதித் சூர்யா மீது புதன்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

உதித் சூர்யா மீது ஆள்மாறட்டம், கூட்டுசதி, மோசடி ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பயிற்சி பெறமுடியாமல் பல ஏழை மாணவர்கள் தவித்து வரும் நிலையில், இதுபோன்று மோசடியில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

NEET, EXAM, CHEATING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்