'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மோசடிகளைத் தடுக்க போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மோசடி செய்பவர்களும் வித்தியாசமான முறையில் பல உத்திகளைக் கையாண்டு மோசடிகளைச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் நடந்துள்ள மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் இருக்கும் சிண்டிகேட் வங்கி தற்போது கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராகத் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முரளி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரை நகையுடன் சந்திக்க வந்த நபரை எதேச்சையாக விசாரித்த வங்கி மேலாளர் பிரவீன் குமார், நகை கொண்டு வந்த நபரிடம் இருந்த ஆவணங்கள் போலியாக இருப்பதைப் பார்த்து அதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது மேலாளர் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த நபர் திடீரென ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் பிரவீன் குமார், நகை மதிப்பீட்டாளர் முரளி பொறுப்பிலிருந்த நகைகளைச் சரி பார்த்துள்ளார். அப்போது முரளி செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. தங்க நகைக்கடன் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த முரளி, அதில் 101 முறை போலி நகைகளுக்கு, அதாவது கவரிங் நகைகளுக்கு ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும் இந்த மோசடி கடந்த 4 ஆண்டுகளாக நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முரளி மூளையாகச் செயல்பட்டதைக் கண்டுபிடித்த பிரவீன்குமார், இது தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. நகை மதிப்பீட்டாளரான முரளி, தங்க நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர்களாகத் தனது நண்பர்கள், உறவினர்களை ஈடுபடுத்தியுள்ளார்.

அவர்களிடம் கவரிங் நகைகளைக் கொடுத்து வாடிக்கையாளர் போல் வங்கிக்கு வரவழைத்து அவற்றைத் தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் முரளி, நகைகள் வங்கி லாக்கரில் வைத்துவிடுவார். அதற்கான கடன் பணத்தில் வாடிக்கையாளர்கள் போல் வரும் தனது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கமிஷன் வழங்கிவிட்டு, மற்ற பணத்தைத் தானே வைத்துக்கொள்வார்.

இதேபோல் 101 முறை போலிக் கணக்குகளைத் தொடங்கி, தங்க நகைக்கடன் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மோசடி செய்து திருடியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் போது, நகை மதிப்பீட்டாளர் முரளிக்கும், சாந்தி என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம் முரளியுடன் சேர்ந்து கொண்டு சாந்தியும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். நகை மதிப்பீட்டாளர் முரளி, உடந்தையாக இருந்த சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவரிங் நகைகளை வைத்து கோடி கணக்கில் கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்