VIDEO: “ஜெய்பீம் படத்துக்கு நாங்க ஆதரவாக இருப்போம்”.. மத்திய அமைச்சர் ‘அதிரடி’ பேச்சு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். தீபாவளி சமயத்தில் அமேசான் OTT தளத்தில் நேரடியாக வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் IMDb தளத்திலும் ஜெய்பீம் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது.

இந்த சூழலில் அத்திரைப்படத்தில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கதாபாத்திரத்தின் வீட்டில் உள்ள காலண்டரில் வன்னியர் சமூகத்தை குறிப்பிடும் வகையிலான சின்னம் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து அந்த காலண்டரில் இடம்பெற்றிருந்த படம் உடனடியாக மாற்றப்பட்டது. ஆனாலும் இதுகுறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தற்போது ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்திடம் 5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சமநீதி மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜெய்பீம் படக்குழுவினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இதை இந்தி, மராட்டி உள்ளிட்ட பிறமொழிகளில் மொழிபெயர்த்தால் அதையும் வரவேற்போம். ஜெய்பீம் திரைப்படத்தின் நடிகர், இயக்குனர் ஆகியோருக்கு இந்திய குடியரசு கட்சி பாதுகாப்பாக இருக்கும்’ என்று ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

SURIYA, RAMDASATHAWALE, JAIBHIM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்