'இது சரி வராது'...'போட்டோவ நெட்ல போட வேண்டியது தான்'... செல்போன் கடைக்கு போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புகைப்படம் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து இணையதளத்தில் பரவ விட்டுவிடுவேன் என செல்போன் கடைக்காரர் மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்போன் பழுதானதால், ராமநாதபுரத்தில் உள்ள கடையில் கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருடன் பேசிய வீடியோ மற்றும் கணவனுக்கு அனுப்பிய புகைப்படங்கள் அந்த செல்போனில் இருந்துள்ளன. இவை அனைத்தையும் செல்போன் கடைக்காரர்கள் தனது கணினியில் பதிவு செய்துள்ளனர். பின்னர் செல்போனை சரிசெய்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து  அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட செல்போன் கடைக்காரர்கள், உங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ எங்களிடம் இருப்பதாகவும் அதனை  மார்பிங் செய்து இணையதளத்தில் பரவ விடாமல் இருக்க 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்கள். இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனை எப்படி கணவரிடமும் உறவினர்களிடமும் கூறுவது என தெரியாமல் பயத்துடனும் பதற்றத்துடனும் தவித்து வந்துள்ளார்.

ஒரு வார காலமாக அந்த பெண்ணை கவனித்து வந்த அவரது மாமனார், மருமகள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அவரிடம் என்ன பிரச்சனை என கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இதையடுத்து மருமகளுக்கு ஆறுதல் கூறிய மாமனார், உடனடியாக உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காவல் ஆய்வாளர் பிரேமிடம் நடந்த விபரங்களை கூறி புகார் அளித்து கொண்டிருந்த போதே, மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள்.

அப்போது காவல்நிலையத்தில் அதிகாரிகள் முன்பே அவனிடம் பேசிய பெண், பணம் இல்லை என கூறி அழுதுள்ளார். உடனே இனி சரியாக வராது, நாளை ஒரு நாள் மட்டுமே டைம், பணம் வரவில்லை என்றால் படங்களை இன்டர்நெட்டில் ஏற்றி விடுவேன் என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளான். இதனைக்கேட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த கும்பலை பொறிவைத்து பிடிக்க திட்டம் போட்டார்கள். அதன் அடிப்படையில் மீண்டும் செல்போனில் அழைப்பு வந்தால், பணத்தை தருவதாகவும், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு போனில் சொல்ல காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

காவல்துறையினர் எதிர்பார்த்தது போன்று, இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த பெண் மறுநாள் நகையை அடகு வைத்து பணத்தை தருவதாகச் சொல்லி, ராமநாதபுரம் டி பிளாக் பஸ்டாப் அருகே வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து கவால்துறையினரின் திட்டப்படி காவல்நிலைய ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையில் எஸ்ஐ வசந்தகுமார், தனிப்பிரிவு தலைமை காவலர் மருது ஆகியோர் டி.பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை ஒட்டியவாறு மறைந்திருந்தனர்.

அப்போது அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உணர்ந்த மர்மநபர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்து செல்லுமாறும் அங்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் போது, பின்னால் ஒருவன் நெருங்கி வருவதை கவனித்த தனிப்படை காவலர் மருது, அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவன் ராமநாதபுரம் சுண்ணாம்புகாரத்தெருவை சேர்ந்த சோமசுந்தரம் என்பது தெரியவந்தது. தனக்கும் நடந்த சம்பவத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையது எனவும், ரெகுநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்ற சூரியகுமார் தான் பணத்தை வாங்கி வர சொன்னதாகவும் சோமசுந்தரம் கூறியுள்ளான்.

இதையடுத்து அங்கிருந்தே பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் வந்து வாங்கிச் செல்லுமாறும் சுரேஷ்குமாரிடம் சோமசுந்தரத்தை போலீசார் பேச வைத்துள்ளனர். அதன்படி பெரியபட்டினம் விலக்கு ரோடு அருகே வரச்சொல்லி அவனையும் மடக்கி பிடித்தார்கள். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் '' செல்போன் பழுதாகும் பட்சத்தில் அதிலிருக்கும் குறுந்தகவல்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை அளித்துவிட்டு செல்போன் கடைகளில் பழுது நீக்க கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் இது போன்று யாரேனும் மிரட்டல் விடுத்தால் தயங்காமல் காவல்துறையை அணுக வேண்டும் எனவும் கூறியுள்ளார்கள்.

CYBERATTACK, RAMANATHAPURAM, THREATENED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்