‘சிசிடிவி மட்டும் இல்லனா அவ்ளோதான்?’.. கொலை வழக்கில் போலீஸிடம் சிக்கி, தப்பிய பாடலாசிரியர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கவிஞர், எழுத்தாளர், திரைப் பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத; மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரைத் தெரிந்த அனைவருக்குமே உண்டான பதற்றம்தான்  சமூக வலைதளங்களில் பல இடுகைகளாக மாறின.

ஆனால் அவர் கைது செய்யப்பட்டதன் பிறகு, அவர் விசாரிக்கப்பட்டது; அவர் வாக்குமூலம் அளித்தது; கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டின் சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது; உதவி செய்ய முயற்சித்ததாக போலீசாரிடம் பிரான்சிஸ் கிருபா தகவல் அளித்தது; 'பின்னர் பிரான்சிஸ் கிருபா குற்றவாளி அல்ல' என்று உறுதி செய்யப்பட்டது; இறுதியில் பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்டது என்று செய்தி சேனல்களிலும், இணையதளங்களிலும் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகின.

இவர் மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் உள்ளிட்ட கவிதை நூல்களையும் கன்னி என்கிற புதினத்தை எழுதிய பிரான்சிஸ் கிருபா 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றவர். இதன் நிமித்தமாக அவரை சந்தித்து பேச புறப்பட்டோம். கேகே நகர் முனுசாமி சாலையின் பிரதான தேநீர் கடை ஒன்றில், பிரான்சிஸ் கிருபாவை அவரது நண்பர்களுடன் சந்தித்தோம். அப்போது தனக்கு நடந்தவற்றை முழுமையாக பிரான்சிஸ் கிருபா கூறியதாவது:

”நேற்று (மே 06, 2019, திங்கள்) காலை கோயம்பேடு மார்க்கெட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் யாரோ ஒருவர் வலியால், வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை தாண்டி பெருமக்கள் பலரும் சென்று கொண்டிருந்தார்கள் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. நானும் அவரை காப்பாற்றும் எண்ணத்தில் அவரிடம் சென்று அவருக்கு உதவ முயற்சித்தேன்.‌ என்னால் என்னதான் செய்ய முடியும்? எனக்கு இருதயம் இருந்ததால், அவரின் இருதயத்துக்கு நேரே தடவி விட்டேன். மேற்கொண்டு அங்கு நடமாடிக்கொண்டிருந்த மக்களிடம் உதவி கேட்டு கெஞ்சி அழைப்பு விடுத்தேன்.

ஆனால் மக்களோ என் மீது சந்தேகப்பட்டு என்னை வந்து அடிக்கத் தொடங்கினர். அதன் பிறகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டேன். அவர்கள் என்னை ஒவ்வொரு கட்டமாக விசாரித்தனர். என் தோற்றத்தை வைத்து இந்த குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர். நான் கவிஞன், எழுத்தாளர், 2007-ஆம் ஆண்டுக்கான விகடன் விருது வாங்கியிருக்கிறேன் என்று போலீசாரிடம் கூறினேன். அதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் ஒரு ரியாக்சனும் இல்லை. நான் இவ்வளவு கூறியதற்காக சிசிடிவி கேமராவை சோதனை செய்யும் முடிவை எடுத்தனர். அந்த சோதனையையும் செய்தனர். அதில்தான் நான் குற்றமற்றவன் என்பது நிரூபணமானது.

அதுவும் இல்லாமல் போயிருந்தால் நான் விடுவிக்கப்பட்டிருப்பது என்பது சிரமம்தான்; அவ்வாறான சூழலில், நான் விசாரிக்கப்பட்டிருக்கும் முறையும் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லி தெரிய தேவையில்லை. பிறகு என் மீது குற்றம் அல்ல என்பதை புரிந்து கொண்டு என்னை விடுவித்தார்கள். ஆனால் இதனிடையே எதையும் உறுதி செய்யாமலேயே, 'நான் கொலை செய்திருக்கலாம்' என்று என்னை சில புகழ்பெற்ற எழுத்துத் துறை மற்றும் ஊடக நண்பர்கள் விமர்சித்துத் தூற்றி,சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றேன்.

சில அரிய நண்பர்கள் எனக்காக வருத்தமுற்று எனக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார்கள் என்பது எனக்கு நெகழ்ச்சியைத் தருகிறது. எது எப்படியோ இப்படியான ஒரு வேளையில் பலவிதமான முகங்களின் உண்மைத் தன்மையை அடையாளம் கண்டுகொண்டேன்"!.

நடக்கும் எல்லாவற்றையும் நமக்கு மேல் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பார் அவர், நமக்கான நன்மை தீமைகளை கவனிப்பார் என்று பெரியவர்கள் சொல்வது போல, மேலிருந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்தான் கவிஞர் பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என்பதை நிரூபித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

FRANSISKIRUBA, POET, WRITER, CRIME, TNPOLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்