பதட்டமான சூழ்நிலையிலும் பம்பரம் போல் சுழன்று... தமிழகமே கவனித்து வரும் IAS அதிகாரி... யார் இந்த பீலா ராஜேஷ்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவலையும், அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெரிவித்து வருவதன் மூலம் தமிழக மக்களின் கவனம் அனைத்தும் சுகாதாரத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் பக்கம் திரும்பியுள்ளது. யார் இந்த பீலா ராஜேஷ்?

பீலா ராஜேஷின் அப்பா எல்.என். வெங்கடேசன் காவல்துறை டி.ஜி.பியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். இவரின் மனைவி ராணி வெங்கடேசன். கன்னியாகுமரியை சேர்ந்த ராணி வெங்கடேசன் காங்கிரஸ் கட்சி சார்பில் 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர்.

மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துள்ள பீலா ராஜேஷ், ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் என்பவரை 1992 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மதுவிலக்கு அமலாக்க பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக உள்ள ராஜேஷ் தாஸ் மற்றும் பீலா ராஜேஷ் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆனார் பீலா ராஜேஷ். பீகாரில் ஒதுக்கப்பட்ட வேலையை தனது கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை சுட்டிக்காட்டி 2000-ஆம் ஆண்டு தமிழகத்தில் தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார். அங்கிருந்து 2003-ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பீலா ராஜேஷ், பின்னர் மத்திய அரசின் இந்திய ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தில்  பணியாற்றினார்.

பின்னர் செங்கல்பட்டு துணை ஆட்சியர், நகர் ஊரமைப்பு இயக்கத்தின் இயக்குனர், மீன்வளத்துறை இயக்குனர் என பல பொறுப்பு வகுத்துள்ள பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் ஆனார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாகி வரும் பதட்டமான இந்த சூழ்நிலையை மிகவும் திறமையாக கையாண்டு வருகிறார் பீலா ராஜேஷ். தினமும் காலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரிடம் கொரோனா குறித்த தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்கிறார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேகமாக ஓடி கொண்டிருக்கும் பீலா ராஜேஷின் கையில் இருந்து தான் மத்திய அரசிற்கு தமிழகம் குறித்த அப்டேட்கள் கிடைக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்