‘ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய?’.. அற்புதம் அம்மாள் வேதனை பதிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்த நிலையில் அற்புதம் அம்மாள் வேதனையுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய?’.. அற்புதம் அம்மாள் வேதனை பதிவு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.

Arputham Ammal tweet about Governor declines Perarivalan’s plea

இதனை அடுத்து 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தனது தண்டனையை நிறுத்தி வைத்தும், விடுதலை செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 21ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Arputham Ammal tweet about Governor declines Perarivalan’s plea

அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’ என உறுதியளித்தார். இதனை அடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் வழங்கி விசாரணையை 2 வார காலத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் முகமது நசீம்கான், உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆராய்ந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என்று தனது விளக்கத்தை கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதுதொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து, அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் கவர்னர். என்ன செய்வதம்மா என பலரும் கொதிப்போடு் கேட்டபடி உள்ளனர். ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்?’ என தனது வேதனையை அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்