'என் நண்பனுக்கு என்ன ஆச்சு'... '40 வருட நட்பு, அடுத்த 10 நிமிடத்தில் நடந்த சோகம்'... சோகத்தில் ஆழ்ந்த மொத்த கிராமம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இறப்பிலும் இணைபிரியாமல் இந்து முஸ்லீம் நண்பர்கள் இறந்தது பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
நட்புக்காகத் தமிழ்ப் படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தத் திரைப்படத்தில் இருவரும் சிறுவயது முதலே இணைபிரியாத நண்பர்களாக வலம் வருவர். இறுதியில் சரத்குமார் உயிரிழந்து விடுவார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர் விஜயகுமாரும் அவர் மேல் சாய்ந்து உயிரிழந்து விடுவார். இதேபோன்றதொரு சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சிறிய தேநீர்க்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலா புதின். இவர் தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலா புதின் கலந்து கொள்வார். அதேபோல் ஜெய்லா புதின் வீட்டில் சுபகாரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
இந்நிலையில் இருவருமே நேற்று உடல்நலக்குறைவால் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஜெயிலா புதின் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகாலிங்கம் அடுத்த 10 நிமிடத்திற்குள் உயிரிழந்தார்.
இதுகுறித்து இருவரின் மகன்களும் கூறுகையில் “எங்களின் தாத்தா முதல் தலைமுறை. தந்தை இரண்டாம் தலைமுறை. இதைத் தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக உள்ளோம். உற்றார் உறவினர்போல் சுப துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களைக் கடந்து நாங்கள் நட்புடன் தொடர்வோம். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்” எனத் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்