‘என்னோட ஆள எப்டி நீ கூப்பிடலாம்?’... ‘வேனை சுத்தம் செய்யும்போது’... 'ஆயுத பூஜை தினத்தில் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆயுத பூஜையின்போது, வேனை சுத்தம் செய்வதில் எழுந்த தகராறில், தன்னுடைய சக வேன் ஓட்டுநரை, மற்றொரு வேன் ஓட்டுநர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (42). இவர் தனது குடும்பத்துடன், திருப்பூர் மாவட்டம் வேட்டுவபாளையம் கிராமத்தில் குடியிருந்து கொண்டு, பால் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான பால் வேனை ஓட்டி வந்தார். அதே, பால் வியாபாரியின் மற்றொரு வேனை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், ஓட்டி வருகிறார். இவரும் குடும்பத்துடன் வேட்டுவபாளையத்தில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் ஆயுதபூஜை தினத்தன்று இருவரும், அவரவர் ஓட்டும் வேனை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டனுடன் வேலைப்பார்த்து கொண்டிருந்த வேலை ஆள் ஒருவரை, சின்னத்தம்பி அழைத்து, தனது வேனை கழுவ உதவி செய்யுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மணிகண்டன், என்னுடைய வேலை ஆளை நீ எப்படி கூப்பிட்டு, வேலை வாங்கலாம் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பால் வியாபாரி அவர்கள் இருவரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

எனினும் வீட்டிற்கு சென்ற இருவருக்கும், மீண்டும் வாக்குவாதம் வரவே, சின்னத்தம்பி அருகிலிருந்த கட்டையால் மணிகண்டனை தாக்க, ஆத்திரமடைந்த மணிகண்டன்  கத்தியை எடுத்து, சின்னத்தம்பியின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னத்தம்பி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

MURDERED, TIRUPUR, MILK, VAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்