"கண் இமைக்கும் நேரத்தில்"... தீப்பிடித்து எரிந்த 'ஆம்புலன்ஸ்'... அதிர்ஷ்டவசமாக தப்பிய கர்ப்பிணி பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அப்பகுதியிலுள்ள குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிரசவத்தில் சிக்கல் இருப்பதால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சி மருத்துவமனை கொண்டு சென்றனர். திருச்சி - கரூர் சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் அருகே கார் ஒன்று மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.

ஆம்புலன்ஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி பெண் மற்றும் அவருடன் இருந்தவர் உயிர் தப்பினார். உடனடியாக மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் கொண்டு சென்றனர்.

சென்ற வழியில் எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் தீபிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சில மணித்துளிகளில் ஆம்புலன்ஸ் மொத்தமாக தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து முழுவதுமாக தீயை அணைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணிக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்