"போதையில, தெரியாம 'போலீஸை' அடிச்சிட்டேன்..." கைதான இளைஞரின் 'கதறல்' வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மீது மதுபோதையில் தாக்குதல் நடத்தி கைதான கணேசன் என்பவர் உருக்கமாக பேசி வருத்தம் தெரிவிக்கும் வீடியோ ஒன்று 'வாட்ஸ்ஆப்'பில் வைரலாக பரவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பேருந்து நிறுத்தப் பகுதியில் பேக்கரி ஒன்றில், 2 பேர் சிகரெட் வாங்கியதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த உச்சிபுளி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டி மற்றும் நந்தகுமார் ஆகியோர் சென்றனர்.

அப்போது மதுபோதையில் இருந்த தகராறில் ஈடுபட்டவர்கள் கற்களைக் வீசி உதவி ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர்கள் இருவருக்கும் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இருவரும் பின்னர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சந்தித்து தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர், போலீசார் மீது தாக்குதல் நடத்திய சட்டவிரோத கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, உச்சிப்புளி அருகே வெள்ளமாசிவலசை பகுதியில் முக்கிய குற்றவாளி கணேசன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவல்துறை நமது நண்பன் என்கிற தொனியில் கைதான கணேசன் பேசிய வாட்ஸ்ஆப் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், பொதுமக்களை பாதுகாத்து வரும் போலீசாரிடம் நண்பனாக பழகி மரியாதை கொடுங்கள் எனவும், நான் மதுபோதையில் உதவி ஆய்வாளர்களை தாக்கிவிட்டேன், என்னைப் போல யாரும் சமூக விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கைதான  கணேசன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ALCOHOL ATTACKER, ARREST, POLICE, WHATSAPP VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்