'கேரளாவிலிருந்து கோழி, முட்டை கொண்டு வர லாரியை விடாதீங்க'... 'தமிழக எல்லைக்கு பறந்த உத்தரவு'... உஷார் நிலையில் அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், தமிழக எல்லைப் பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் இறந்து மடிந்த வாத்துகளிலிருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதித்ததில் அவற்றில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தெரிவித்தார். இதையடுத்து கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு கால்நடைத்துறை செயலாளர் ஞானசேகரன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''தமிழக எல்லையோர மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் உஷாராக இருக்குமாறு'' அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ''கேரளாவிலிருந்து கோழி, முட்டை, இறைச்சி மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது'' எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக, கேரள எல்லையில் தமிழக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதேபோன்று கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையுள்ள எல்லையோர மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளை பார்வையிட்டு தொற்று அறிகுறி இருந்தால் உடனே தகவல் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்துப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சலைத் தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் கோழி, வாத்து உள்ளிட்டவற்றைக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்