“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ்! .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை!'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சூடுபிடிக்கும் அரசியல் களம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குழப்பம் நிலவிவருவதாக பேசப்பட்டுவரும் நிலையில், தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், அதே சமயம் முதல்வர் பழனிசாமியுடன் அதிமுக மூத்த அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரால் பொதுச் செயலாளராகவும் முதல்வர் வேட்பாளராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு கட்சியைக் கவனிக்க தினகரனையும் நியமித்துவிட்டு சசிகலா சென்றார்.

ஆனால் அடுத்தடுத்த மாற்றங்களால் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்பு , ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனது, தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது,  ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டது என பரபரப்பாக வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என கட்சிக்கு வெளியில் இருந்த பேச்சு, தற்போது கட்சிக்குள்ளிருந்து, அதாவது ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையாக தொடங்கி கட்சியின் செயற்குழு வரை எதிரொலித்துள்ளது.

இதனிடையே தேனிக்குச் சென்ற ஓபிஎஸ் அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதுடன்,  கீதையின் வரிகளை மேற்கோள் காட்டி, “மக்கள் நலனுக்கேற்ப தனது முடிவு இருக்கும்” என ஓபிஎஸ் பதிவிட்ட ட்வீட் முதன்முதலாக அவரது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் பரபரப்பை ஒருபுறம் ஏற்படுத்தி வருகிறது. 

இதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைசார்ந்த கட்டிடங்களை காணொளி மூலம் திறந்த வைத்த முதல்வர் பழனிசாமி, பின்னர் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.  இதன்மூலம் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பின் மீதான எதிர்பார்ப்பு சூடுபிடித்துள்ளது. இந்த அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த பரபரப்பு நிமிடங்களால் தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்