'குக்கரா, அத நாங்கதான் வாங்கியிருக்கோம்'.. இது என்ன புது சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு போட்டியாக களமிறங்கும், பல சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை வாங்கிக் கொடுத்துள்ளோம்' என அமைச்சர் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'அ.ம.மு.க. ஒரு கட்சியா?. அது ஒரு ஆமை மூக்கன் கட்சி. இன்னும் பதிவு செய்யப்படாத கட்சி. குக்கர் சின்னத்தை வாங்கியதே நாங்கள் தான். அதை சில சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கி, அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு போட்டியாக களமிறக்கிவிட்டுள்ளோம்' என தெரிவித்தார்.

அ.ம.மு.க.-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், 2017-ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் நடைபெறவிருக்கும் மக்களவை மற்றும் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அவர் மீண்டும் குக்கர் சின்னத்தைக் கோரினார். ஆனால், அவரது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

எனினும், அ.ம.மு.க.-வின் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக ‘பரிசுப் பெட்டகம்’ சின்னத்தை ஒதுக்கியது. இதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என அ.ம.மு.க.-வினர் பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது அமைச்சர் மணிகண்டன் பேச்சு அமைந்துள்ளது.  இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் ஒரு கூட்டத்தில், 'தினகரன் அணியில் உள்ளவர்கள், அ.தி.மு.க.வின் கட்சியையும், கரை வேட்டியையும் கட்டினால், அவர்கள் உடலிலிருந்து வேட்டியை உருவி எடுத்து விட்டு, அவர்களை அடித்து துரத்தும்படியும்' அமைச்சர் மணிகண்டன் கூறினார். மேலும் 'அ.தி.மு.க. சின்னத்தை யாராவது பயன்படுத்தினால் போலீசாரிடம் கூறி அவர்களை அடித்து நொறுக்கிவிடுவோம்' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

TTVDINAKARAN, MINISTER, MANIKANDAN, COOKER, AMMK, ADMK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்