"போன வருஷம் கூட மகாபலிபுரத்த பார்த்தீங்க.. அத நெனைச்சு பாருங்க!".. பிரதமருக்கு 'பறந்த' தமிழக முதல்வரின் 'பரபரப்பு' கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக் குழுவில்  இடம்பெற வேண்டும் என, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில், “கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மக்களின் கலாச்சார தோற்றம், பரிணாம வளர்ச்சி மற்றும் உலகின் பிற கலாச்சாரங்களுடன் இருந்த தொடர்புகள் உள்ளிட்டவை பற்றிய ஆய்வை நடத்த அமைக்கப்பட்டுள்ள மத்திய கலாச்சாரத்துறை நம்முடைய மாறுபட்ட கலாச்சார வேரினை அறிவதற்குண்டான நம்முடைய புரிதலை ஆழப்படுத்தும் என்பதால் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. 

ஆனால் அந்த பழமையான நாகரிகம் கொண்ட தமிழகத்தில் இருந்து, பிரதிநிதிகள் இந்த கலாச்சார ஆய்வுக் குழுவில்  இடம்பெறவில்லை என்பது கவலை அளிக்கிறது. சமீபத்தில் கீழடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த அகழாய்வு முடிவுகள், கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது சங்க காலம் என்றும், இதன்மூலம், தமிழ் மொழியும் கலாச்சாரமும் உலகிலேயே பழமையான பாரம்பரியம் கொண்டது என்பதையும் நிரூபிக்கின்றன.

கடந்த ஆண்டு நீங்கள் (பிரதமர் மோடியை சுட்டுகிறார்) தமிழகத்திற்கு வருகை தந்து மகாபலிபுரத்தையும், பிரம்மிக்க வைக்கும் அதன் காலம் கடந்த நினைவுச்சின்னங்கள் மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற மரபு உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டதை நினைவுபடுத்தி பார்க்க வேண்டுகிறோம். ஆகையால், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் என்பதும் தமிழ்க் கலாச்சாரம் மற்றும் மொழிக்குண்டான சரியான இடத்தை வழங்காமல் முழுமையடையாது என்பதை நீங்கள் ஏற்பீர்கள். 

அந்த அடிப்படையில் கலாச்சாரத்துறை அமைச்சகம், இந்த நிபுணர் குழுவில் தமிழக நிபுணர்களைப் புறக்கணித்தது ஆச்சரியமளிக்கிறது. எனவே, தமிழகத்தின் சிறந்த அறிஞர்களை அந்த ஆணையத்தில் இடம்பெறச் செய்ய, தாங்கள் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தமிழக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்