'ஏன் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டேன்'?... 'இறப்புக்கு முன் நடிகர் விவேக் பேசிய கடைசி பேச்சு'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இறப்புக்கு முன் நடிகர் விவேக் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையைத் திரையில் பரப்பி 'சின்னக் கலைவாணர்' என கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக். திடீரென ஏற்பட்ட அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அவர், எதற்காக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்பது குறித்து விளக்கினார். ''இன்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரியின் டீன் திருமதி ஜெயந்தி, கோவிட் பிரிவுக்குப் பொறுப்பாளரான டாக்டர் ரமேஷ் , மல்டி ஸ்பெஷாலிட்டிக்கு பொறுப்பாளரான டாக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

எனது நண்பர்களும் போட்டுக் கொண்டார்கள். இந்த ஊசியைத் தனியார் மருத்துவமனையில் நான் ஏன் போடவில்லை, அரசு மருத்துவமனையில் ஏன் போட்டுக் கொள்கிறேன் என்ற கேள்வி வரும். அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சென்று சேருகின்ற மருத்துவ சேவை செய்து வருகிறது.

அதனால் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா, இல்லை வேண்டாமா, இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என மக்களிடையே பலவிதமான வதந்திகள் உலவுகின்றன. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும். இந்த ஊசியைப் போட்டதால் எந்தவித ஆபத்தும் கிடையாது, நமக்குப் பாதுகாப்பு உண்டு என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவே நான் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்டேன்.

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற மாநிலங்களில் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. நம் தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு சமூகப்பாதுகாப்பு என்பது இந்த முகக் கவசமும் கையை அடிக்கடி கழுவுவதும் சமூக இடைவெளியும்தான்.

ஆனால் மருத்துவ ரீதியான பாதுகாப்பு தற்போது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இந்த கொரோனா தடுப்பூசிதான். இது தவிர நிறையப் பேர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், விட்டமின் சி, ஜின்க் மாத்திரை உள்ளிட்டவற்றை மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இதெல்லாம் சரிதான். இவையெல்லாம் கூடுதல் பாதுகாப்பு. அரசு மூலமாக வரும் தடுப்பூசிதான் உங்கள் உயிரைப் பாதுகாக்கும்'' என விவேக் பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்