கலைஞர் சொன்ன ‘அந்த’ வாக்கியம்.. மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ‘முக்கிய’ அறிக்கை வெளியிட்ட சூர்யா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதில், திமுக மட்டும் 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் அளித்தார். மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து இன்று (07.05.2021) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. அங்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவரைத் தொடர்ந்து 34 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘முடியுமா நம்மால்‌? என்பது தோல்விக்கு முன்பு வரும்‌ தயக்கம்‌, முடித்தே தீருவோம்‌! என்பது வெற்றிக்கான தொடக்கம்‌...’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாக்கியத்தை குறிப்பிட்டு, ‘முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள்‌ வரிசைகட்டி முன்நிற்க, சட்டப்பேரவை தேர்தலில்‌ மகத்தான வெற்றி பெற்று “மக்களின்‌ முதல்வராக” பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம்‌ நிறைந்த வாழ்த்துகள்‌.

சுவாசிப்பதற்கு “உயிர்‌ காற்று” கூட கிடைக்காமல்‌ மக்கள்‌ அல்லல்படுகிற இந்த பேரிடர்‌ காலத்தில்‌, நீங்கள்‌ ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள்‌ ஆட்சியில்‌ அனைத்து துறைகளிலும்‌ தமிழகம்‌ வளர்ச்சியடையும்‌ என்று நம்புகிறோம்‌. தங்களுக்கும்‌, ஆற்றலும்‌ அனுபவமும்‌ நிறைந்த தமிழக அமைச்சர்‌ பெருமக்களுக்கும்‌ மனப்பூர்வமான வாழ்த்துகள்‌. தமிழகத்‌தின்‌ உரிமைகளை மீட்கத் தமிழர்களின்‌ ஒருமித்த குரலாக இனி உங்கள்‌ குரல்‌ ஒலிக்கட்டும்‌’ என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்