'நாந்தான் இந்தியன்.. நாந்தான் இந்து.. நீங்க ஆண்டி இந்தியன்’.. சாடும் கரு.பழனியப்பன்.. அனல் பறக்கும் பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திரைப்பட இயக்குநர், நடிகர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட கரு.பழனியப்பன் பிஹைண்ட்வுட்ஸின் எதிர்நீச்சல் பகுதிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பலவிதமான கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

'நாந்தான் இந்தியன்.. நாந்தான் இந்து.. நீங்க ஆண்டி இந்தியன்’.. சாடும் கரு.பழனியப்பன்.. அனல் பறக்கும் பேட்டி!

இந்த 5 வருஷத்துல டெவலப்மெண்ட்டே இல்லை என்கிறீர்களா?

இல்ல. இந்த தேசத்தின் அடிப்படை மதச்சார்பின்மை. இங்கு எல்லாரும் எல்லா மதத்தினரும் இன்பமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் இந்த இந்தியா. 60 ஆண்டு கால இந்த நாட்டில் நிம்மதி இருந்தது. யாரிடமும் அச்சம் இல்லை. ஆனால் இந்த 5 வருஷத்துலதான் இந்த தேசத்தில் அச்சம் வந்தது. நான் என்ன ஆவேன். என்ன செய்ய விரும்புறாங்க இந்த தேசத்த என்கிற அச்சம். அது மோசம். நீங்க ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே உடை, ஒரே உணவு என்பதெல்லாம் எப்படி சந்தோஷம் கொடுக்கும். இது வேற வேற மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்திய ஒன்றியம் என்பதை நாம் ஒரு தேசமாக வைத்திருக்கிறோம். இந்த தேசம் எனக்கு விருப்பமான தேசம். நான் தான் இந்தியன். இந்த தேசம் ஒரே மாதிரி இருக்கணும்னு சொல்ற நீங்க ஆண்டி இந்தியன். ஒரே மாதிரி மாற்ற முயற்சி செஞ்சு அவன புடிச்சு அழுத்துனீங்கனா, மூச்சு முட்டுனா அவன் திமிறுவான். அப்போது இந்தியா உடையும். அப்போ நீங்கதான் ஆண்டி இந்தியன். நான்தான் இந்தியன். எல்லாரும் அவரவர் விருப்பத்தை வெச்சுக்கங்க. நீங்க தேர்தலை சந்திக்க போறீங்க. ஆனால் சாதனைகளே சொல்ல மாட்டீங்குறீங்களே. இந்த முறை ஓட்டு போடுங்க. அடுத்த முறை சரி பண்றோம்ங்குறீங்க. பெட்ரோல் விலையை குறைக்கிறோம்னு பிரதமர் சொல்றாரு. கடந்த 5 வருடமா நீங்கதானே இருந்தீங்க. அப்போ என்ன பண்ணீங்க. எதிர்க்கட்சி போலவே வாக்குறுதிகளை அளிக்கிறீங்க? ஒரு தேர்தலில் எதிர்க்கட்சி வாக்குறுதிகளையும் ஆளுங்கட்சி சாதனையையும் சொல்லும். நீங்க உங்க சாதனைகளை சொல்லுங்க.? கோவையில் பாஜக சார்பில் எம்.பி போட்டிக்கு நிற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், திரும்பவும் அவங்க ஆட்சிக்கு வந்தா கோவை சிறுகுறு தொழில் முதலாளிகளுக்கு உதவுற வகையில் ஜிஎஸ்டியை 5% ஆக குறைப்போம் என்கிறார். நீங்கதானே இருக்கீங்க? பண்ணியிருக்கலாமே? சாதனை, மறுசீரமைப்பு என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்களே? குண்டு போட்டதை தவிர என்ன சாதனை இவர்களிடம்.

ஆண்டி இந்தியனுக்கான தகுதிகள் என்ன?

அவர்கள் சொல்லும் ஆண்டி இந்தியனுக்கான தகுதிகள் சில இருக்கு.. அதாவது இந்த தேசம் ஒற்றுமையாக இருக்கனும்னு பேசுனீங்கன்னா நீங்க ஆண்டி இந்தியன், இங்க எல்லாரும் அவரவர் விருப்பத்தோடு சந்தோஷமா வாழலாம்னு சொன்னீங்கனா நீங்க ஆண்டி இந்தியன், உங்க மொழியை காப்பாத்தனும்னு நீங்க போராடினீங்கனா ஆண்டி இந்தியன், நீங்க சுயமரியாதையோட கேள்வி கேட்டீங்கன்னா நீங்க ஆண்டி இந்தியன், எதுவெல்லாம் இந்த தேசம் இதுவரைக்கும் கட்டமைத்து வைத்திருந்ததோ, எதுவெல்லாம் இந்த தேசம் இன்பமாக வாழ்வதற்கு அடிப்படியோ அதையெல்லாம் பேசினா ஆண்டி இந்தியன்.

அரசாங்கத்தை கேள்வி கேட்பது ஒரு உரிமை இல்லையா? கேள்வி கேட்பது அவ்வளவு பெரிய தப்பா?

அப்படித்தானே சொல்றாங்க. பிரதம மந்திரியை நோக்கி தமிழகம் கேள்வி கேட்கக் கூடாது என்று எச்.ராஜா சொல்றார். நீங்க ஓட்டு போட்டு அவர் (மோடி) பிரதமராகல என்கிறார். அப்போ 70 %ல் 30 % ஓட்டு வாங்கிதான் நீங்க பிரதமரானீங்களா? இத கேட்டா நீ இந்து இல்ல. நீ பாகிஸ்தானுக்கு போ என்கிறார்கள். ஆனால் நான்தான் இந்து. சுயமரியாதையுடன் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பான்.  அவர்கள் இந்து இந்து என்று சொல்லி நம்மை கிட்னி எடுக்க கூப்பிடுகிறார்கள். சங்கராச்சாரியாருக்கு எதிரில் பொன்.ராதாகிருஷ்ணன் உட்கார மாட்டார். சுப்ரமணிய சுவாமிதான் உக்காருவார். நீங்க சுயமரியாதையுடன் வாழ விரும்பும் இந்துவாக இருக்க வேண்டும் என்றால், பாஜகவுக்கு எதிராக ஓட்டு போட்டால்தான் சங்கராச்சாரியாருக்கு எதிரில் உட்கார முடியும். நம்மை மீண்டும் கக்கத்தில் துணியை வெச்சுக்கிட்டு கும்புடுறேன் சாமி என்று சொல்ல வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் மாறுமா?

அது நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை பாஜக மீது இல்லை. இந்த 5 வருஷத்துல பாத்துட்டோமே. உங்க நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள். எனக்கில்லை. துப்புரவுத் தொழிலாளர்களை உட்கார வைத்து கால்களை கழுவுறது நீங்க போடுற நாடகம். ஆனா, அதுக்கு ஒரு வாரத்துக்கு அப்புறம் மலக்குழியில விழுந்து விபத்துக்குள்ளானவங்களுக்கு ஒரு நடவடிக்கையும் இல்ல. மேக்-இன் -இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியான்னு அத்தன சவளைப்பிள்ளை பேர் வெச்சீங்க. ஆனா அதுல வெற்றி பெற்ற திட்டம் எது? உங்களின் மிகப்பெரிய சாதனையாக பணமதிப்பிழப்பு கொண்டுவந்தீங்க. அத சாதனையா சொல்லி ஒரு ஆள் கூட ஓட்டு கேக்க மாட்டுறீங்க. 110 பேர் பணம் எடுக்க முடியாம செத்துப் போனாங்க. இதில் ரிசர்வ் வங்கியில் இருந்து 16 ஆயிரம் கோடி ரூபாய் வரல. அதுக்கு ஆன செலவு 21 ஆயிரம் கோடி. எனக்குத் தெரிஞ்சு தூண்டிலில் திமிங்கலம் போட்டு புழு புடிச்சது இவங்க மட்டும்தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை உயர்த்திட்டோம்னு சொல்லி, மீண்டும் ஓட்டு கேட்டு பார்க்க சொல்லுங்க. வாக்காளன் ஓட ஓட விரட்டுவான்.

தேர்தலில் பணத்துக்காக ஓட்டு விற்பது, பணப்பட்டுவாடா பற்றி.?

இது காமராஜர் காலத்தில் இருந்து இருக்கு. அண்ணா தன் பிரச்சாரத்தில் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க என கெஞ்சுகிறார். எங்களிடம் பணம் இல்லை. எதிர்க்கட்சியினர் என்கிற பெரும் முதலாளிகள், வெங்கடாஜலபதி புகைப்படத்தை வெச்சுக்கிட்டு சத்தியம் வாங்குகிறார்கள். அப்ப சரின்னு சொல்லிட்டு, மனசுக்குள்ள உதய சூரியனுக்கு ஓட்டு போடனும்னு நெனைச்சுக்கங்க, என்று சொல்லி அண்ணா பிரச்சாரம் செய்தார். அன்று முதல் இன்றுவரை, பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்குள் வருவதால் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.

திமுக-அதிமுக-வின் முக்கியமான பெருந்தலைவர்கள் இல்லாத இந்த தேர்தலை எப்படி பாக்குறீங்க?

திமுகவில் கலைஞர் கருணாநிதி இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆனால் அந்த இயக்கம் வலுவாக இருக்கு. அந்த பக்கம் அதிமுகவை எதிர்த்து நிற்கும் டிடிவி தினகரனும் வலுவாக இருக்கிறார். ஆகையால் இது மும்முனைப் போட்டிதான்.

ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே?

ஆமாம், அதில் என்ன? அப்படித்தானே இருக்கு. எங்கயுமே அப்படித்தானே? பழுத்த காங்கிரஸ்வாதியான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தர்ராஜன் அங்க இடம் இல்லங்குறதுனால பாஜகவில் இருக்காங்க. அப்ப வேற கட்சியில இருந்தா ஓகேவா? இது வாரிசு அரசியல் இல்லையா?

LOKSABHAELECTIONS2019, CONGRESS, KARUPAZHANIYAPPAN, INTERVIEW, BJP, DMK

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்