'சென்னையில் ஆச்சரியம்'... 'ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்தால் இதுதான் நடக்கும்'... நேப்பியர் பாலத்தில் மாஸ் காட்டும் நாய்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு நாய் ஒன்று செயல்படுவது சென்னைவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாடாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச்சூழ்நிலையில் ஊரடங்கு காலத்தில் சத்தமே இல்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நாய் ஒன்று நின்று கொண்டு, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளைத் துரத்திச் சென்று குரைக்கிறது. அதே நேரத்தில் போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சென்றால் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து விடுகிறது.

நோயின் தாக்கம் தெரியாமல் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்ற எண்ணம் கூட சிலருக்கு ஏற்படாத நிலையில், சாலையில் செல்பவர்களை நாய் விரட்டுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சில காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ''நாங்கள் சாப்பிடும் போது அந்த நாய்க்கும் சாப்பாடு கொடுப்போம்.

ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு உதவி செய்யும் வகையில் இந்த நாய் செயல்படுவது, எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. போலீஸ் ஜீப்புகள், ஆம்புலன்ஸ்கள் செல்லும்போது இந்த நாய் அமைதியாக இருக்கிறது. குரைப்பது இல்லை. மற்ற வாகனங்களில் செல்பவர்களைத் தான் இந்த நாய் துரத்திச் சென்று குரைக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்