நாளை ஆடி அமாவாசை... தர்ப்பணம் கொடுக்க 'முடியாதவர்கள்' என்ன செய்ய வேண்டும்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? என ராமேஸ்வரம் புரோகிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மாவட்டம் ராமநாத சுவாமி கோவில் எதிரே உள்ள அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரம் தலத்துக்கு ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் வந்து, அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் கூடுவார்கள். இதேபோல் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அன்றைய தினம் திதி, தர்ப்பண பூஜை நடக்கும்.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த 3 மாதங்களாக ராமேஸ்வரம் கோவிலுக்கு மக்கள் வருவது இல்லை. இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை வருகிறது. இதையொட்டி நாளை ஒரு நாளாவது அனுமதி அளிக்க வேண்டும் என புரோகிதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரம் ஊரடங்கால் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து புரோகிதர் ஒருவர் கூறுகையில், ''ஆடி அமாவாசை என்பது மிக முக்கியமான நாளாகும். அன்றைய தினம் ஊரடங்கால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய முடியாத பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வருகிற 20-ந் தேதி தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் தொடங்கி மதியம் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றோருக்கு உணவும் அளிக்க வேண்டும். கடவுளை வேண்டி வழிபட்ட பின்பு, மதிய உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்