சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட பெண்..பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  இங்கு நேற்று பெண் ஒருவரை திருச்சிற்றம்பல மேடை மீது நின்று சாமி  செய்ய முயற்சி செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. பெண் ஒருவரை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்தாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது அங்கே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணை அங்கு இருந்த தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், தீட்சிதர்கள் தன்னை சாதி பெயர் குறிப்பிட்டு இழிவாக பேசியதாகவும் பாதிக்கப்பட்ட ஜெயஷீலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

20 பேர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம் கோவிலைச் சேர்ந்த தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒருவர்

சிதம்பரம் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணேஷ் தீட்சிதர் என்பவரும் கனகசபைக்கு மேலே நின்று சாமி தரிசனம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதனால் சக தீட்சிதர்கள் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, கணேஷ் அளித்த புகாரின் பேரில் 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இருந்தனர் காவல்துறையினர். இந்நிலையில், இதே விஷயம் காரணமாக பெண் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

யாருக்கும் உரிமை இல்லை

இந்த சம்பவம் குறித்துப் பேசிய கணேஷ் தீட்சிதர் மகன் தர்சன் தீட்சிதர், ” நடராஜர் கோவிலின் சிற்றம்பல மேடை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். அது தவறானது. சிற்றம்பல மேடையின் மீது ஏறி அனைவரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ” என்றார்.

அவதூறு

இந்நிலையில் சிதம்பரம் கோவிலைச் சேர்ந்த தீட்சிதர் வெளியிட்டுள்ள வீடியோவில், " கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவே கனக சபைக்கு மேல் நின்று பெண்மணியை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. கடந்த ஆண்டு ஒரு பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தீட்சிதர் ஒருவரை 2 மாதங்கள் சஸ்பெண்ட் செய்திருந்தோம். தற்போது பழிவாங்கும் நோக்கத்துடனேயே அவர் இப்படி செயல்பட்டு வருகிறார். அந்தப் பெண்மணியை கோவில் கருவறைக்குள் அழைத்துச் செல்ல அவர் முயற்சித்தார். அதனால் அவரை மீண்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். அதன் காரணமாகவே, அந்தப் பெண்ணை தீட்சிதர்கள் தாக்கியதாக அவர் கூறி வருகிறார்" என்றார்.

பிரபல கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் தற்போது தமிழகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

CHITHAMBARAM, TEMPLE, சிதம்பரம், கோவில், தீட்சிதர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்