'அம்மா உங்க புருஷன் உடல எடுக்க போறாங்க'... 'கதறி அழுத அடுத்த நொடி நடந்த சோகம்'... 'வியக்கவைத்த அன்யோன்யம்'... நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமண வாழ்க்கையில் இருக்கும் அன்யோன்யம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த அன்யோன்யமே கடைசி வரை கணவன், மனைவிக்குள் இருக்கும் அன்பையும், பாசத்தையும் நிலைத்திருக்கச் செய்யும். அப்படி ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்டு. 88 வயதான இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மாநில முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மேரி செல்லம்மாள் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. இந்த தம்பதிக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். ஒரு மகன் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக இருந்தார். மற்ற 2 மகன்களும் தனியார் நிறுவன ஊழியராகவும் தொழில் அதிபராகவும் உள்ளனர். மகள்கள் கல்லூரி பேராசிரியராகவும், டாக்டராகவும் உள்ளனர்.

இந்நிலையில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்பத்தில் கொரோனா ரூபத்தில் சோதனை வந்தது. மருத்துவராக பணியாற்றி வந்த மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் பிரிவு ஆல்பர்டு, மேரி செல்லம்மாள் தம்பதியரைப் புரட்டி போட்டது. இருவரும் மகன் இறந்த அதிர்ச்சியிலிருந்த நிலையில், ஆல்பர்டு வயது மூப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார். ஏற்கனவே மகன் இறந்த துக்கத்திலிருந்த செல்லம்மாளுக்கு கணவனின் திடீர் மரணம் பேரிடியாக அமைந்தது. இதையடுத்து தந்தையின் இறுதிச் சடங்குக்கான வேலைகளை மகன்கள் கவனித்து வந்தனர்.

இதற்கிடையே கணவனை நினைத்து அழுது கொண்டே இருந்த செல்லம்மாள், அவரின் இறப்பை ஏற்று கொள்ள முடியவில்லை. முதியவர் ஆல்பர்டின் இறுதி ஊர்வலத்திற்காக அனைவரும் தயாரான நிலையில், செல்லம்மாளிடம் கணவனின் உடலைக் கல்லறைக்குக் கொண்டு செல்ல இருப்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அப்போது கணவனின் உடலைப் பார்த்துக் கதறி அழுத செல்லம்மாள், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதறிப் போன அவரது மகன்களும், உறவினர்களும் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்தார்கள். அவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

தாயின் எதிர்பாராத இறப்பு மகன் மற்றும் மகள்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. ஏற்கனவே தந்தை மற்றும் சகோதரரின் இறப்பால் கலங்கி நின்ற குடும்பத்திற்கு இந்த செய்தி நெஞ்சில் பேரிடியாக இறங்கியது. அங்கிருந்த உறவினர்கள், அன்பிற்கும், பாசத்திற்கும் அடையாளமாய் இருந்தவர்கள் ஆல்பர்டு, செல்லம்மாள் தம்பதியினர். ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர். இப்படி வாழ்விலும், சாவிலும் கூட இணை பிரியாத தம்பதியாக இருந்து விட்டார்களே'' என கூறி கதறி அழுதார்கள்.

இதனையடுத்து மாலை 5 மணிக்கு ஆல்பர்டு, செல்லம்மாள் ஆகியோரின் உடல்கள் உறவினர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் ராமன்புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், ஒரே கல்லறையில் கண்ணீர் மல்க அடக்கம்  இருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கணவன் இறந்த துக்கத்திலிருந்த மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்