மாநகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து... ஒரே செகண்டில்... பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தி.நகரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர், கீழே தவறி விழுந்து, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி எம்.ஜி.ஆர். நகர், பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் குமார் என்பரது மகன் சரண். இவர் தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா மி‌ஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இதனால் தினமும் பள்ளிக்கு மாநகரப் பேருந்திலேயே சென்று வருவார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியிலிருந்து, தி.நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில், நண்பர்களோடு, சரண் பயணம் செய்துள்ளார்.

பரபரப்பான வேலை நேரமான காலை 8.30 மணி அளவில், தி.நகர் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து சென்றபோது, படிக்கட்டுக்கு வந்து மாணவர்கள் ஒவ்வொருவராக பேருந்திலிருந்து குதித்துள்ளனர். அப்போது மாணவர் சரண், படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சல் போட்டனர். எனினும் விழுந்த வேகத்தில் சரண் மீது, பேருந்தின் சக்கரம் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர் திருஞானத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளி மாணவர்கள் அனைவரும் படியில் தொங்கி பயணம் செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, இது மாணவர்களின் தவறா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

BUS, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்