'40 வருட தாம்பத்தியம்'... 'கதறி அழுத அடுத்த நொடி நடந்த சோகம்'... 'இப்படி ஒரு கணவன் மனைவியா'?... நெகிழவைத்த அன்யோன்யம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமண வாழ்க்கையில் இருக்கும் அன்யோன்யம் தான் கடைசி வரை அந்த உறவை உறுதியாகக் கொண்டு செல்லும். அதே நேரத்தில் அந்த அன்யோன்யமே கடைசி வரை கணவன், மனைவிக்குள் இருக்கும் அன்பையும், பாசத்தையும் நிலைத்திருக்கச் செய்யும். அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது குளத்துப்பாளையம். இங்குள்ள சிவன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர். இவரது மனைவி சரோஜினி (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் அவரது ஒரே மகன் இறந்து விட்டார். இது கணவன் மனைவியை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

மகன் இறந்த சோகம் ஒரு புறம் இருக்க, பணியிலிருந்து ஓய்வும் பெற்று விட்டதால் ஒரு மாறுதலுக்காக ராமமூர்த்தி அருகில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வெல்டிக் செய்யும்போது தீப்பொறி கண்ணில் பட்டு காயம் அடைந்தார். அதன்பின்னர் கண் பார்வை மங்கியது. இது தவிர அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரை அவரது மனைவி சரோஜினி கவனித்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராமமூர்த்திக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த சரோஜினி அவருக்கு முதல் உதவி செய்தார். இது குறித்து அருகில் உள்ள மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் வீட்டிற்கு வந்து ராமமூர்த்தியை சோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமமூர்த்தி இறந்தது குறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டுச் சென்றார்.

கணவர் இறந்த தகவலைக் கேட்ட சரோஜினி பித்துப் பிடித்தது போல் அங்குமிங்கும் ஓடினார். சிறிது நேரத்தில் மயங்கினார். மேலும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சரோஜினியையும் மருத்துவர் மூலம் பரிசோதனை செய்தனர். அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார். இது ராமமூர்த்தி மற்றும் சரோஜினி குடும்பத்தினரைப் பேரதிர்ச்சியில் தள்ளியது. சாவிலும் இணைபிரியாத தம்பதியின் இறப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தம்பதி குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, ராமமூர்த்தியும், சரோஜினியும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். இளமைக் காலத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு மக்களுக்காகப் போராடினர். போராட்ட களத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணமாகி 40 ஆண்டுகள் ஆன நிலையில் காதல் தம்பதி எங்குச் சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். நல்ல நண்பர்களைப் போன்று மகிழ்ச்சியாக இருந்தனர்.

ராமமூர்த்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது இரவும், பகலுமாக அருகிலிருந்து கவனித்து வந்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருந்து, மாத்திரைகளை உரிய நேரத்திற்குக் கொடுத்துப் பாதுகாத்து வந்தார். முதுமை அவர்களைத் தழுவியபோதும் காதல் உறுதியாகவே இருந்தது'' என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 

40 வருடத் தாம்பத்தியத்தை மரணத்தால் கூட பிரிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்