“இறப்பதற்கு 2 நாளைக்கு முன்னாடி, அவர் ஒரு 20 நிமிஷம்..” - 'பாடகர் SPB-க்கு சிகிச்சை அளித்த 52 நாட்கள்'!.. 'உருக்கமான' நினைவுகளை பகிரும் Dr Deepak.. 'வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிய  அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுடனான கடைசி 52 நாட்கள் பற்றிய தனது அனுபவங்களை பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “எப்போதும் நான் மருத்துவமனை சென்றபிறகு முந்தைய நாள் இரவு வரை என்னவெல்லாம் நடந்தது என்று சிகிச்சை தொடர்பான சுருக்கமான தகவல்களை பற்றிய விரைவு சந்திப்பு ஒன்று காலையில் நடக்கும். அதன் பிறகு நான் ஒருமுறை மருத்துவமனை முழுவதும் சுற்றுப்பார்வை மேற்கொள்வேன். அறுவை சிகிச்சைகள் இருந்தால் செய்வேன், மேற்பார்வையிடுவேன் இப்படிதான் என்னுடைய வழக்கமான பணநாட்கள் சென்று கொண்டிருந்தன.

ஆனால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கிய பிறகு இந்த 52 நாட்கள் வித்தியாசமாக மாறியது. தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவருடன் நேரத்தை செலவிட முடிந்தது. மகிழ்ச்சி ஆகட்டும் எந்த ஒரு உணர்வாகட்டும் அவருடைய குரல், அவருடைய பாடல், வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்லும். நான் மருத்துவ மாணவராக இருக்கும் பொழுது அவருடைய பாடல்களை தொடர்ந்து கேட்க செய்தேன்.

ஒரு நாள் ஆகஸ்டு 3-ம் தேதி எனக்கு போன் செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தனக்கு காய்ச்சலாக இருப்பதாக கூறியதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது துரதிஷ்டவசமாக அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அதன் பின்னர் அவருடைய வயதை கவனத்தில் வைத்துக்கொண்டு உயரிய பாதுகாப்பு கண்காணிப்பின் கீழ் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவருக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க தொடங்கினோம்.

எனக்கு அவரை 5 வருடங்களாக தெரியும். ஒருமுறைகூட அவர் தன்னை ஒரு விஐபி போல் நடத்தச் சொல்லி கூறியதும் இல்லை. அவர் அப்படி நடந்து கொண்டதும் இல்லை. பல நேரங்களில் என்னை அவர் சந்திக்க வரும் பொழுது கூட அவருக்கு முன்னுரிமை அளிக்கச் சொல்லி என்னுடைய உதவியாளரிடம் கூறுவதுண்டு. காரணம் அவர் வரும் பொழுது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்ள நேரிடும். ஏனென்றால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள். இப்படி எல்லாம் நான் நினைப்பேன். ஆனால் அவர் ஒரு முறை என்னிடம் சொன்னது என்னவென்றால், “டாக்டர் என்னையும் மற்ற நோயாளிகளை போலவே நடத்துங்கள். என்னை சிறப்பாக கவனிக்க வேண்டாம்!” என்பதுதான்.

எங்களுடைய மருத்துவமனையில் புதிய துறை ஒன்று தொடங்கும்போது எனக்கு வேறு யாரும் ஞாபகம் வரவில்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை நாங்கள் சிறப்பு விருந்தினராக அழைத்தபோது அந்த அழைப்பிதழில் பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பதிவிட்டிருந்தோம். உடனே எங்களுக்கு போன் செய்த அவர், “என் பெயர் முன்னாள் பத்மஸ்ரீ என்று ஏன் போட்டீர்கள்? என் பெயர் எஸ்பிபி என்று போட்டால் மட்டும் போதாதா?” என்று கேட்டார். அப்படிப்பட்ட மென்மையான மனம் கொண்ட ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சையின்போது ஆக்சிஜன் இன்னும் தேவைப்பட்டது. அதன் பிறகு நார்மல் வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாங்கள் மாற்றினோம். அப்போது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அப்போது அவர் என்னிடம், “தீபக் நீங்கள் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.  என்ன பண்ணணுமோ அதை பண்ணுங்க!” என்று கூறினார்.

பின்னர் அவர் சுயநினைவுக்கு திரும்பிய பிறகு எழுதுவதற்கு பேப்பர், பேனாவை ஏற்பாடு செய்தோம். அப்போது அவர் தனக்கு தோன்றிய குறிப்புகளை எழுதினார். அதில் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நிறைய குறிப்புகளை எழுதியிருந்தார். அவர் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரையும் பேதம்  இன்றி ஒரே மாதிரி மரியாதையாகவே நடத்தினார். எல்லோருக்குமே மிக நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்.

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு 20 நிமிடம் அவர் எங்களுடன் நேரம் செலவிட்டார், அதன்பிறகு அவருடைய உடல்நிலையில் உண்டான சில முன்னேற்றங்களை கண்டு நாங்கள் கூட மிகவும் நம்பினோம். ஆனால் கடைசி 48 மணி நேரம் தான் அவருடைய உடல் நிலை இன்னும் மோசமானது. என்னதான் வதந்திகள் வெளிவந்தாலும் இந்த கடைசி 52 நாட்கள் என் வாழ்வின் மிகச் சிறந்த நினைவுகளை நான் பெற்றேன். அவர் தன்னைப் பார்த்துக் கொள்ள என்னை தேர்வு செய்தார். அதை நான் பெருமையாக கருதுகிறேன். அவருடன் நேரம் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மறக்கவே முடியாது!

டாக்டர் சபாநாயகம், நந்திகிஷோர், சுரேஷ் ராவோ, கே.ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் அவருக்காக ஒன்றாக பணி புரிந்தோம் அதன்பிறகு எஸ்பிபி அவர்களின் மகன் சரணுடன் எஸ்பிபி உடல்நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது பகிர வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நாங்கள் நெருங்கினோம். அவருடைய குடும்பத்திற்காக எப்போதும் என் சேவை இருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு விஷயத்தை முக்கியமாக எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். இத்தனை பெரிய மனிதர் மிகவும் பணிவுடனும் கம்பீரத்துடனும் மென்மையுடனும் இருந்திருக்கிறார். அவர் தன் குரல் மூலமாகவும் அவருடைய பாடல்கள் மூலமாகவும் எப்போதும் நம்மிடையே இருக்கிறார்.” என்று மருத்துவர் தீபக் சுப்ரமணியன் பேசியுள்ளார்.

அத்துடன் தான் ஒரு மருத்துவர் என்பதையும் தாண்டி தனக்கு எஸ்பிபியை மிகவும் பிடிக்கும் என்றும், எஸ்பிபியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவர் பேசியிருக்கும் இந்த நீண்ட குறிப்புகள் மிகவும் நெகிழ வைத்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்