நள்ளிரவில் விபத்துக்குள்ளான 'சொகுசுப் பேருந்து'... பெண் காவலர் உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து மோதி போக்குவரத்து பெண் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமங்கலத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டி.பி.கே. பாலம் அருகே தல்லாகுளம் போக்குவரத்து பெண் காவலர் ஜோதி, உறவினர் சத்தியவாணி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க காத்திருந்துள்ளனர்.

தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் ஜோதி, சத்தியவாணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்த சொகுசுப் பேருந்து, மற்றொருபுறம் சாலையைக் கடக்க காந்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் திருச்சியைச்  சேர்ந்த ஆனந்தன் என்பவரும் பலியானார்.

இந்த விபத்தில் படுகாயங்களுடன் தப்பிய ஆனந்தனின் நண்பர் விக்கி, சத்தியவாணியின் மகள் ஆகியோரை மீட்டு போலீசார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் சொகுசுப்பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பயணிகள் உயிர்தப்பினர்.

பெங்களூரில் இருந்து திருப்பூர் நோக்கி 20 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சின்னார் என்ற பகுதியில், பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

FIREACCIDENT, BUSACCIDENT, DIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்