நோய் தடுப்பு பணிக்காக... கட்டுப்பாடு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கும் அரசு!.. இறுதியில் 'கொரோனா' கொடுத்த 'ட்விஸ்ட்'!.. என்ன நடக்கிறது சென்னையில்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர் கட்டுப்பாடு பகுதிகளில் இல்லாமல் மற்ற இடங்களில் வசிப்பவர்கள் என்பது புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.

சென்னையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றும் புதிதாக 364 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நேற்றைய நிலவரப்படி ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கத்தில் 1,041 பேரும், திரு.வி.க. நகரில் 790 பேரும், தேனாம்பேட்டையில் 746 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த தெருக்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவித்து சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் கடந்த வாரத்தில் 690 ஆக இருந்த கட்டுப்பாடு பகுதிகள் இப்போது 764 இடங்களாக அதிகரித்து உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர் கட்டுப்பாடு பகுதிகளில் இல்லாமல் மற்ற இடங்களில் வசிப்பவர்கள் என்பது புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.

கடந்த 16-ந் தேதி 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 94 பேர் கட்டுப்பாடு பகுதியில் இல்லாமல் வேறு இடங்களில் வசித்தவர்கள் ஆவர்.

இதேபோல் 17ம் தேதி 482 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் 133 பேர் கட்டுப்பாடு பகுதியில் இல்லாதவர்கள் ஆவர்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. கட்டுப்பாடு பகுதியில் இல்லாமல் அதிகபட்சமாக கடந்த 16-ந் தேதி 15 பேரும், 17-ந் தேதி 24 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால் கட்டுப்பாடு பகுதியில் இல்லாமல் மற்ற இடங்களில் நோய் தொற்று பரவி உள்ளது. ஒவ்வொருவருக்கும் நோய் தொற்று எப்படி பரவியது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்