'பார்க்க டிப் டாப் லுக், சொகுசு கார்'... 'கொஞ்சம் இந்த அட்ரஸ் மட்டும் சொல்லுங்க'... திருப்பூரை அதிரவைத்த 3 இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் அருகே வளையங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மற்றும் சாலையில் நடந்து சென்ற நபர்கள் உட்பட 5 பேர் மீது அதிவேகமாக வந்த ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன அந்த பகுதி பொதுமக்கள், உடனடியாக வேகமாகச் சென்ற காரை துரத்திச் சென்றனர். அப்போது காந்தி நகர் சிக்னல் அருகே அந்த காரை சுற்றி வளைத்த பொதுமக்கள், காரில் இருந்த 3 இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கினார்கள்.

இதனிடையே இந்த தகவல் காவல்துறையினருக்குத் தெரிய வந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் மூன்று இளைஞர்களையும் மீட்டுக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா ஜெகதீஷ், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பைசல், திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில், ''சூர்யா ஜெகதீஷும், பைசலும் கோவையிலிருந்து காரில் திருப்பூர் வந்து சூர்யாவை அழைத்துக் கொண்டு திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கண்ணன் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவரது அருகில் சென்று காரை நிறுத்திய அந்த கும்பல், முகவரி கேட்பது போலக் கண்ணனின் சட்டையைப் பிடித்து இழுத்து பையில் உள்ள பணத்தைக் கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் பணத்தைத் தர மறுத்துள்ளார். இதையடுத்து 3 பேரில் ஒருவர் காரில் இருந்த கத்தியை எடுத்து வந்து கண்ணன் கழுத்தில் வைத்து பணத்தைக் கொடுக்குமாறு மிரட்டினார். இதனால் பயந்துபோன அவர் ‘திருடன் திருடன்’ என்று கூச்சல் போட்டுள்ளார். ஆனால் 3 பேரும் கண்ணன் சட்டைப் பையிலிருந்த ரூ.5 ஆயிரத்து 200 பணத்தைப் பறித்துக் கொண்டு, அவரை தள்ளி விட்டு அதே  காரில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கண்ணன் திருடன் திருடன் என கூச்சலிட்டதால் பதட்டத்துடன் வேகமாகக் காரை இயக்கிய போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியுள்ளனர். நின்றால் பிடித்து விடுவார்களோ எனக் காரை நிறுத்தாமல் இயக்கிய போது மேலும் நான்கு பேர் மீது மோதி உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடமிருந்து சொகுசு கார், வழிப்பறிக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சினிமாவை மிஞ்சும் சம்பவமாக காரில் வந்து கத்தி முனையில் தொழிலாளியிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்