‘50 நிமிசம் பயன்பாட்டில் இருந்திருக்கு’!.. பைக்கில் வாக்கு இயந்திரம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் ‘அதிரடி’ திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரம் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றிரவு வேளச்சேரியில் இருந்து 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை 2 பேர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என்றும், பழுதான 2 விவி பேட் இயந்திரங்கள் மற்றும் 2 மாற்று இயந்திரங்கள் தான் எடுத்துச் செல்லப்பட்டன என்று தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தற்போது தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த சத்யபிரதா சாகு, ‘வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரம் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில், 15 வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் இருந்தன. இது முழுக்க முழுக்க விதிமீறல். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்’ என்று தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்