'சுவருக்கும், தூணுக்கும் நடுவில் சிக்கித்தவித்த சிறுவன்'...'திக்திக் நிமிடங்கள்'...சென்னையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டின் சுவர் மற்றும் தூணுக்கு நடுவில் சிக்கித் தவித்த பள்ளி மாணவனை, தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் அசோக் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நித்தீஷ் என்ற 12 வயது மகன் இருக்கிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு நித்தீஷ், தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது வீட்டின் சுற்றுச்சுவருக்கும், அதன் அருகில் உள்ள தூணுக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளி வழியாக நித்தீஷ் புகுந்து செல்ல முயன்றான். அந்த நேரத்தில் சுவருக்கும்-தூணுக்கும் நடுவில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டான். அவன் எவ்வளவு முயன்றும் வெளியே வரமுடியவில்லை. இதனால் பயந்துபோன நிதிஷ், அச்சத்தில் கூச்சலிட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கடப்பாரையால் சுவரை இடித்து நித்தீசை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் அது முடியாமல் போனது.

ஒரு கட்டத்தில் நிதிஷ் பயந்து போக, இதுபற்றி செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அவர்கள் நித்தீஷ் சிக்கிக்கொண்ட சுவரின் ஒரு பகுதியை லேசாக சுத்தியலால் அடித்து உடைத்தனர். அதனைத்தொடர்ந்து அவன் அணிந்திருந்த ஆடைகளை கத்திரிக்கோலால் கிழித்து அகற்றினர். இதனைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நித்தீசை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட நித்தீசுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCHOOLSTUDENT, CHENNAI, FIRE SERVICE, RESCUED, SCHOOL BOY, WALLS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்