"இத்தன நாள் அவரு திணறுறதுக்கு காரணம் இதான்.. 'தோனி'யோட மிரட்டல் 'அடி'ய கூடிய சீக்கிரம் பாப்பீங்க.." வேற லெவல் வெயிட்டிங்கில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்றின் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் விளையாடி, ஐந்தில் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில்  உள்ளது. கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், 7 ஆவது இடம் பிடித்து சிஎஸ்கே வெளியேறியிருந்த நிலையில், அந்த அணி மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, இந்த சீசனிலும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், களமிறங்கிய சென்னை அணி மிகச் சிறப்பாக ஆடி, தங்களது அணியின் வலிமையை நிரூபித்துள்ளது. இந்த சீசனில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டாலும், சிஎஸ்கே ரசிகர்களை ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

கடந்த சீசனில் சென்னை அணியினரின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, பினிஷர் என அழைக்கப்படும் தோனி, எந்தவித தாக்கத்தையும் பேட்டிங்கில் ஏற்படுத்தவில்லை. சென்னை அணி இந்த சீசனில் ஃபார்முக்கு வந்தாலும், இந்த முறையும் தோனி பேட்டிங் பெரிதாக எடுபடவில்லை. 7 போட்டிகள்  ஆடியுள்ள தோனி, 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு ஆடி வருகிறார். அதிலும், அவரது பழைய அதிரடி பேட்டிங்கை காண முடியாததால், அதிக விமர்சனத்தையும் அவர் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் (Deepak Chahar), தோனியின் ஃபார்ம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஒரு பேட்ஸ்மேனால் 15 - 20 ஆண்டுகளுக்கு ஒரே மாதிரியான ஆட்டத்தைக் கொடுக்க முடியாது. ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக, எந்தவொரு போட்டிகளும் ஆடாமல் இருப்பவர்களுக்கு, பேட்டிங்கில் சிறப்பாக ஆட சற்று நேரம் எடுக்கும். அதுவும், தோனி போல, போட்டியின் ஃபினிஷராக செயல்படக் கூடியவர்களுக்கு அது இன்னும் கடினமானதாக இருக்கும்.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசன்களிலும், தோனி மெதுவாக தான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு தான், தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினார். அதைப் போல, இந்த சீசனின் இரண்டாவது பாதியில் தான், தோனியின் சிறந்த ஆட்டத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்' என சிஎஸ்கே ரசிகர்களுக்கு தீபக் சாஹர் நம்பிக்கையளித்துள்ளார்.

தொடர்ந்து தோனியின் கேப்டன்சி குறித்து பேசிய தீபக் சாஹர், 'சிஎஸ்கே அணியில், இது எனக்கு நான்காவது ஆண்டாகும். எனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனி என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் மிக முக்கிய காரணம். பவர் பிளேயில் 3 ஓவர்களை வீசும் வாய்ப்பை தோனி எனக்கு பல போட்டிகளில் கொடுத்தார். அதன் மூலம், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். ஒரு வீரரை சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தான், தோனி கேப்டன்சியின் சிறப்பம்சம்' என தீபக் சாஹர் புகழ்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்