டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்!.. யார் யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை?.. பண மழையைப் பொழியும் ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெற்றிப் பெறும் அணிக்கான பரிசுத் தொகை வியக்க வைக்கிறது.

இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 18ம் தேதி தொடங்கும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, முதன் முறை நடக்க இருப்பதால், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இணையான எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தொடரின் சாம்பியன் அணி $1.6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை பெற உள்ளார்கள். இந்த தொகையானது, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11.71 கோடி ஆகும். 

அதேபோல், தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு, $800,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.8 கோடி ஆகும். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிக்கான பரிசுத் தொகை $450,000 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.3 கோடி. 

அதைத் தொடர்ந்து, அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ள அணிக்கு $350,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2.57 கோடி வழங்கப்படும். ஐந்தாவது இடத்தைப் பெறும் ஒருவருக்கு $200,000 வழங்கப்படும். இந்திய தரப்பில் தோராயமாக ரூ.1.5 கோடி. மீதமுள்ள நான்கு அணிகளுக்கும் தலா $100,000 தொகை வழங்கப்படும். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 73 லட்சம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான விதிகளையும் ஐசிசி முன்பே அறிவித்திருக்கிறது.

அதன்படி இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒரு நாள் ஆட்டம் பாதித்தால், அடுத்த நாள் விரைவாக தொடங்க அனுமதிக்கப்படும். அதேசமயம், மாலையில் ஒரு மணி நேரம் வரை கூடுதலாக விளையாடுவது அனுமதிக்கப்படும். இவை கை கொடுக்காத பட்சத்தில், ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரிசர்வ் நாள் பயன்படுத்துவது தொடர்பாக ஐந்தாவது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதை மேட்ச் ரெஃப்ரி இரு நடுவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், 5 நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்