‘இதுக்கு ஒரு எண்டே கிடையாதா..?’.. மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 ரசிகர்கள்.. WTC Final-ல் நடந்த பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது மைதானத்தில் இருந்து இரண்டு ரசிகர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரண்டாம் நாளில் இருந்து போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் 249 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டெவன் கான்வே 54 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இந்த இறுதிப்போட்டியைக் காண வந்த இரண்டு ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக குறைவான ரசிகர்களே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நேரில் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ரசிகர்கள், நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லரை இன ரீதியாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை டிவி  நேரலையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கவனித்துள்ளனர். உடனே தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக ஐசிசியிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ரசிகர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை ரசிகர்கள் சிலர் இதேபோல் இன ரீதியாக கிண்டல் செய்தனர். இதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதனால் அப்போது அந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்