என்ன இந்திய அணி ஓப்பனிங் ஜோடில இவ்வளவு சிக்கலா!?.. நெருங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்... கோலிக்கு வந்த பூதாகர தலைவலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே பெரிய தலைவலி உருவாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணிக்கு ஓப்பனிங் ஜோடி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.  

இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா தான் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக முதல் சில ஓவர்களை வீசப்போவது நியூசிலாந்தின் டாப் பவுலர்களான டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட் மற்றும் கெயில் ஜேமிசன் ஆவர். இதில் ரோகித் சர்மா அனுபவ வீரராக இருப்பினும், சுப்மன் கில்லின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது. 

இங்கிலாந்து ரோஸ் பவுல் மைதானம் நியூசிலாந்தில் இருப்பதை போன்று இல்லாவிட்டாலும், நியூசிலாந்து அணி தங்களது வேகப்பந்துவீச்சின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 2-0 என்ற கணக்கில் தோற்றது. இந்த தொடரில் டிம் சவுதி 14 விக்கெட்களும், ட்ரெண்ட் போல்ட் 11 விக்கெட்களும் கைப்பற்றினர். இவர்களுக்கு உதவியாக கெயில் ஜேமிசன் உள்ளார். 

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை தான் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளார். அதே போல முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் ஆடுகிறார். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக ஆடியதன் மூலம் ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால், சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின்னர் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. இங்கிலாந்து தொடரிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி அவர் சொதப்பியுள்ளார். 

இந்த நிலையில் தான், ரோகித்துடன் களமிறங்க மயங்க் அகர்வால் சரியான ஜோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக நியூசிலாந்தை எதிர்கொண்ட டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் தான் அதிக ரன்களை அடித்திருந்தார். 2 போட்டிகளில் 104 ரன்கள் அடித்தார்.

அகர்வாலின் பேட்டிங் முறை மற்றும் ஸ்டைல் இங்கிலாந்து களத்திற்கு நன்கு பொருந்தும் எனக்கூறப்படுகிறது. நியூசிலாந்து பவுலர்களை ஏற்கனவே எதிர்கொண்ட அனுபவம் மயங்க் அகர்வாலுக்கு உள்ளதால் ரோகித்சர்மா- மயங்க் அகர்வால் ஜோடி ஓப்பனிங் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்