‘வெற்றியுடன் விடை பெறணும்னு ஆசை’!.. WTC Final தான் என்னோட ‘கடைசி’ போட்டி.. ஓய்வு பெறப்போகும் நட்சத்திர வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நியூஸிலாந்து வீரர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (18.06.2021) தொடங்க உள்ளது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதவுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் போட்டி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்த இறுதிப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங் (BJ Watling) தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னமே பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் பிஜே வாட்லிங் இடம்பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பிஜே வாட்லிங் இடம்பெற்றிருந்தார். அப்போது முதல் டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் தனது கடைசி போட்டியான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், தற்போது ப்ளேயிங் லெவனில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதால், இறுதிப்போட்டியில் பிஜே வாட்லிங் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய பிஜே வாட்லிங், ‘காயத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரனாக காயம் அடைவதெல்லாம் அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் இதுபோன்ற சமயத்தில், சீக்கிரமாக குணமாகி வந்தது ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

இந்த இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்ற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரைக் நாங்கள் கைப்பற்றியதால், அது எங்களுக்கு மனரீதியான நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது என்னுடைய கடைசி சர்வதேச போட்டி என்பதால், வெற்றியுடன் ஓய்வு பெற நான் விரும்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிஜே வாட்லிங் (35 வயது), கடந்த 2009-ம் ஆண்டு நியூஸிலாந்து அணியில் அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்த அவர், பேட்ஸ்மேனாக 3789 ரன்களை எடுத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக 290 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்