இரட்டை ‘தொப்பி’-உடன் வலம் வந்த இங்கிலாந்து கேப்டன்.. ‘இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா..!’.. வெளியான காரணம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியின்போது தலையில் இரண்டு தொப்பிகள் அணிந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது  டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன்க்கு 100-வது டி20 போட்டியாக அமைந்தது. மேலும் இங்கிலாந்து அணி சார்பாக 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இப்போட்டியில் மைதானத்தில் மோர்கன் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது இரண்டு தொப்பிகளுடன் அடிக்கடி அவரை பார்க்க முடிந்தது. அதற்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புது விதமான ஸ்டைல்க்காகவோ அல்லது வேறு எந்த ஒரு பயன்பாட்டிற்காகவோ அப்படி இரட்டை தொப்பிகளை மோர்கன் அணியவில்லை.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனோ பரவல் காரணமாக கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி சில விதிகளையும், நிபந்தனைகளையும் விதித்தது. அதன்படி, பந்துவீச்சாளர்கள் யாரும் பந்தில் எச்சில் தடவக் கூடாது என்று அறிவித்திருந்தது. அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் எந்த நாட்டுக்கு விளையாட சென்றாலும் பயோ பபுள் வளையத்தில் இருந்து விளையாடவேண்டும் என்று அறிவித்தது.

அதுமட்டுமின்றி வீரர்கள் களத்தில் விளையாடும்போது அவர்கள் பயன்படுத்தும் தொப்பி, சன் கிளாஸ், டவல், கிட் என எந்தவிதமான கிரிக்கெட் உபகரணங்களையும் அம்பயர்களிடம் கொடுக்கக் கூடாது என்று கட்டளை விதிக்கப்பட்டது. பொதுவாக பந்துவீச்சாளர்கள் பந்துவீச செல்லும் முன் அம்பயர்களிடம் தங்களது உடைமைகளை கொடுத்து விட்டு பந்துவீச செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக அம்பயரிடம் எந்த பொருட்களையும் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே பந்துவீச்சாளர்கள் சக வீரர்களிடம் தங்களது பொருட்களை கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். அதன் காரணமாகத்தான் பந்துவீசும் வீரர்களுடைய தொப்பியை வாங்கி மோர்கன் தனது தலையில் வைத்துக் கொண்டார். இதுதான் அவர் இரட்டை தொப்பியுடன் போட்டியில் வலம் வர காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்