பாக்சிங் டே டெஸ்ட் .. நடைபெற காரணம் என்ன??.. ஏன் அந்த பெயர் வந்தது?..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்காவிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 டெஸ்ட் போட்டித் தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டித் தொடரில் ஆடவுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சுரியன் மைதானத்தில் 'பாக்சிங் டே' ஆன நாளைய தினம் ஆரம்பமாகிறது. அதே போல, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வென்று முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியும், பாக்சிங் டே ஆன நாளைய தினம், மெல்போர்ன் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
ஆண்டு தோறும், இந்த பாக்சிங் டே எனப்படும் டிசம்பர் 26 ஆம் தேதியன்று, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல், வேறு விளையாட்டுகளிலும், பாக்சிங் டே அன்று போட்டிகள் நடைபெறும். கிறிஸ்துமஸ் நாளின் மறுதினம் பாக்சிங் டே என அழைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
பாக்சிங் டே வரலாறு
பிரிட்டனில், 1800 களின் சமயத்தில், மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தார். அந்த சமயத்தில் தான், இந்த பாக்சிங் டே உருவானது. கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, பணம் படைத்த செல்வந்தர்கள், ஏழை மக்களுக்கு பரிசு பொருட்களை பாக்ஸில் வழங்குவார்கள். அதே போல, தனது வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களுக்கும், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த கிஃப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது.
ஊர் சுற்றுதல்
அது மட்டுமில்லாமல், 'பாக்சிங் டே'வை பிரபலப்படுத்தியதற்கு தேவாலயங்களுக்கும் முக்கிய பங்குண்டு. அங்கு வரும் ஏழைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனை கிறிஸ்துமஸிற்கு மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதியன்று பிரித்து பார்ப்பார்கள். அதே போல, நம்மூரில் காணும் பொங்கல் அன்று, மக்கள் அனைவரும் வெளியே சுற்றித் திரிவது போல, பாக்சிங் டே அன்றும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியே சுற்றுலா செல்வார்கள்.
முதல் டெஸ்ட் போட்டி
இதனால் தான், அன்றைய தினம் பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகள் நடத்தி வருகிறது. அதனைக் காண மக்கள் கூட்டமும் அலை மோதும. முதல் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 1950 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மைதானமான மெல்போர்னில் தான் அனைத்து ஆண்டும், பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறும். இதனைக் காண, சுமார் ஒரு லட்சம் பேர் வரை மைதானத்தில் திரள்வார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி
டெஸ்ட் போட்டிக்கு, அதிக பார்வையாளர்கள் கலந்து கொண்ட சாதனையும் மெல்போர்ன் மைதானத்தில், பாக்சிங் டே போட்டியின் போது நிகழ்ந்துள்ளது. கடந்த 1985 ஆம் ஆண்டு, முதல் முதலாக இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டது. இதுவரை சுமார் 10 தடவை வரை இந்திய அணி பாக்சிங் டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளது. குறிப்பாக, கடைசி ஆண்டு, ஆஸ்திரேலிய அணியை மெல்போர்னில் எதிர்கொண்டிருந்த இந்திய அணி, அதில் வென்று சாதனை படைத்திருந்தது. இதனையடுத்து, இந்த முறை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்