ரோஹித்தா?.. ராகுலா?.. கோலியின் இடம் யாருக்கு?.. இந்த 'லிஸ்ட்'ல சர்ப்ரைஸாக இருக்கும் இளம் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், இந்தியாவின் அடுத்த கேப்டனாக யார் பணிபுரிய வாய்ப்புள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி இழந்த மறுநாளே, டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். 33 வயதே ஆகும் விராட் கோலி, திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது, ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன் என்பதுடன் மட்டுமில்லாமல், பல்வேறு சாதனைகளையும் விராட் கோலி தலைமையில், இந்திய டெஸ்ட் அணி படைத்துள்ளது. இனி வரும் காலங்களில், பேட்டிங்கில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டி, கோலி இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

அடுத்த கேப்டன் யார்?

இதனிடையே, இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது பற்றியும், கேள்வி எழுந்துள்ளது. கோலி தனது முடிவினை அறிவித்து, 3 நாட்களான நிலையிலும், அடுத்த கேப்டன் பற்றி பிசிசிஐ எந்த தகவலும் வெளியிடவில்லை. இதனால், அடுத்த கேப்டன் யாராக இருக்க வாய்ப்புள்ளது என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

அதிக வாய்ப்பு

ஒரு நாள் மற்றும் டி 20 போட்டியின் கேப்டனாக, அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தன்னுடைய கேப்டன்சி திறமையை ஐபிஎல் போட்டிகள் உட்பட பலமுறை நிரூபித்துள்ள ரோஹித், டெஸ்ட் கேப்டன் ஆனாலும் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

சிக்கல் என்ன?

ஆனால், அதே வேளையில், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருப்பதால், அந்த சுமையின் காரணமாக, அவரது பேட்டிங்கில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.



இன்னொரு பக்கம், உடற்தகுதி காரணமாக, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்கவில்லை. இதற்கு முன்பாகவும், தன்னுடைய உடற்தகுதி காரணமாக, சில டெஸ்ட் தொடர்களை ரோஹித் தவற விட்டுள்ளார். அவர் டெஸ்ட் கேப்டன் ஆகும் பட்சத்தில், தொடர்ந்து போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிகிறது.

அனுபவம் இல்லை

ரோஹித்தை தொடர்ந்து, டெஸ்ட் கேப்டனாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுபவர் கே எல் ராகுல். தொடர்ந்து, டெஸ்ட் அணியில் பங்கேற்று வரும் ராகுல், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி காயம் காரணமாக விலகியதால், தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த போட்டியில், இந்தியா தோல்வி அடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த போட்டியில் சில தவறுகளை ராகுல் மேற்கொண்டிருந்தார். அவரின் கேப்டன்சிக்கு அனுபவம் போதாது என்ற விமர்சனமும் எழுந்தது. இதனை சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களே தெரிவித்திருந்தனர்.

பூம் பூம் பும்ரா

இவர்களைத் தவிர, அனுபவம் மற்றும் தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்து வருபவர்கள் என்றால் பும்ராவும், அஸ்வினும் தான். வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, அடுத்து தொடங்க இருக்கும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தன்னுடைய பந்து வீச்சால், எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் பும்ராவிற்கு, ஒரு வேளை கேப்டன் பதவி கிடைத்தால், அதனை அவர் எப்படி மேற்கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தாக்கம் இல்லை

சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போதைய டெஸ்ட் அணியின் அதிக அனுபவமுள்ள வீரர்களில் ஒருவர். தன்னுடைய பந்து வீச்சில், நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டு, எதிரணி வீரர்களைக் கணிப்பதில் சிறந்த துல்லியம் உடையவர். இதனால், அவரது பெயரும் பரிந்துரை செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஆனால், வெளிநாட்டு மண்ணில் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருந்தாலும், பெரிய ஒரு தாக்கத்தை, தனது சுழற்பந்து வீச்சால் ஏற்படுத்தியதில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட, சில விக்கெட்டுகளை மட்டுமே அஸ்வின் வீழ்த்தியிருந்தார். இதனால், அதைப் பற்றியும், பிசிசிஐ கருத்தில் கொண்டு முடிவு செய்யவே, வாய்ப்புகள் உள்ளது.

இளம் வீரருக்கு வாய்ப்பு?

ரோஹித், ராகுல், பும்ரா, அஸ்வின் என இவர்களைத் தாண்டி, ஒரு வீரருக்கு வாய்ப்பு போகலாம் என்றால், ஒரு வேளை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு கிடைக்கும். கிரிக்கெட்டில் அறிமுகமான குறுகிய காலத்தில், மூன்று வடிவிலான போட்டிகளிலும் தன்னுடைய திறமையை பண்ட் நிரூபத்திருந்தார்.

இதனால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். நான்கு சீனியர் வீரர்கள் உள்ளதால், அவர்களைத் தாண்டி, ஒரு இளம் வீரருக்கு டெஸ்ட் கேப்டன் வாய்ப்பு என்பது நிச்சயம் கடினமான ஒன்று தான். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட சில போட்டிகளில், தன்னை ஒரு சிறந்த கேப்டனாகவும் நிரூபித்துள்ளதால், ஏதாவது ஒரு வகையில் அவரையும் பரிந்துரை செய்யலாம் என தெரிகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது பற்றி, பல்வேறு யூகங்கள் இருக்கும் நிலையில், காலம் தாமதிக்காமல், இன்னும் புதிய யூகங்களை வகுக்கச் செய்யாமல், பிசிசிஐ ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

VIRATKOHLI, RAVICHANDRAN ASHWIN, ROHIT SHARMA, RISHABHPANT, KLRAHUL, VIRAT KOHLI, ROHIT SHARMA, KL RAHUL, RAVICHANDRAN ASHWIN, BUMRAH, RISHABH PANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்