"'கோலி' எப்போ சொதப்புராறோ, அப்போ எல்லாம் இவரு தான் 'ஹீரோ' மாதிரி வந்து நம்ம டீம காப்பாத்துறாரு.." 'முன்னாள்' வீரர் சொன்ன சிறப்பான 'விஷயம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது.

இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து ஆடுகளங்களில், வேகப்பந்து வீச்சிற்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளிலுமுள்ள உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதே வேளையில், எப்படிப்பட்ட பந்து வீச்சாளர்களையும் சமாளிக்கக் கூடிய பேட்ஸ்மேன்களும் இரு அணியிலும் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன் ரஹானே (Rahane), வெளிநாடு மைதானங்களில், மிகவும் சிறப்பாக ஆடி ரன் எடுக்கக் கூடியவர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம். எஸ். கே பிரசாத் (MSK Prasad), ரஹானேவைப் பாராட்டி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், பல ஏற்ற இறக்கங்களை ரஹானே சந்தித்திருந்தாலும், அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை எப்போதுமே நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தனது அணி எப்போது நெருக்கடியை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, சிறப்பாக ஆடி ரன் எடுப்பார். எனவே தான், அவரது ஏற்றத் தாழ்வுகள் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர் மீது எந்த கடுமையான முடிவுகளையும் எடுக்காமல் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

அவர் எப்போதும் மிக வலிமையாக மீண்டு வரக் கூடியவர். அவர் ஒரு மிகச் சிறந்த அணி வீரர், எல்லோரும் அவரை மிகவும் விரும்புகிறார்கள். எப்போதெல்லாம், விராட் கோலி (Virat Kohli) ஆடத் தவறுகிறாரோ, அப்போதெல்லாம் அந்த வேலையை ரஹானே சிறப்பாக செய்துள்ளார்.


கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், கோலி இல்லாத இந்திய அணியை, ஒரு கேப்டனாக இருந்து, ரஹானே எப்படி அற்புதமாக வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ரஹானேவின் வெளிநாட்டு ரெக்கார்டுகள் என்பது, பல இந்திய வீரர்களை விட சிறந்ததாக உள்ளது. அவர் இந்தியாவில் வேண்டுமானால், சில நேரம் தடுமாறியிருக்கலாம். அதற்காக, நாம் அவர் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கக் கூடாது' என பிரசாத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்