அந்த ‘மேட்ச்’ முடிஞ்சதுமே சொல்லிட்டாரு.. ஓய்வு ‘முடிவை’ சக வீரர்களிடம் சொன்ன வாட்சன்.. ‘சீக்ரெட்டை’ வெளியிட்ட சிஎஸ்கே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வாட்சன் ஓய்வு குறித்து எப்போது தெரிவித்தார் என சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வாட்சன் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வர ஆரம்பித்தார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றதில் வாட்சனுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளில் ஆடியுள்ளார். ஆனாலும் சிஎஸ்கே அணியுடன் மட்டும் அதிக பிணைப்பு இருந்ததாக வாட்சன் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது எப்போதும் தனி அன்பு வைத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதமடித்து சென்னை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வாட்சன் சற்று தடுமாறியே வந்தார். அதேபோல் சென்னை அணியும் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. தற்போது வாட்சனின் இடத்தை இளம்வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே ஆடி வந்த வாட்சன், இனி அவற்றில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் வாட்சனுக்கு நன்றி கூறும் வகையில் ‘ThankYouWatson’ என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அதில் சென்னை அணிக்காக வாட்சன் செய்த சாதனையை பகிர்ந்தனர். முக்கியமாக 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் காலில் காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் ஆடியதை நினைவுகூர்ந்து உருக்கமாக பதிவிட்டனர்.

இந்த நிலையில் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விஷயத்தை சிஎஸ்கே வீரர்களிடம் வாட்சன் எப்போது கூறினார் என சென்னை அணி தெரிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது கடைசி போட்டியை பஞ்சாப் உடன் விளையாடியது. அப்போட்டியில் வெற்றி பெற்றபின் டிரெஸ்ஸிங் ரூமில் தான் ஓய்வு பெறும் விஷயத்தை சக சிஎஸ்கே வீரர்களிடம் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வீரராக இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் வாட்சனுக்கு காட்டிய அன்பு அளவிடமுடியாதது. இதை நிரூபிக்கும் வகையில், ‘கடந்த 3 வருடங்கள்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாக இருக்கும்’ என சென்னை அணியில் விளையாடியதை வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்