‘அவர் எடுத்த முடிவு கரெக்ட்தான்’.. திடீர் அதிர்ச்சி கொடுத்த வீரருக்கு ஆதரவாக பேசிய ரஹானே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (03.08.2021) தொடங்க உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் காலவரையற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடியபோது விரலில் காயம் ஏற்பட்டதால், பாதியிலேயே நாடு திரும்பினார். இதனால் சில மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ் விளையாடாமல் இருந்தார். இதனை அடுத்து காயத்தில் இருந்து மீண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் செயல்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ‘The Hundred’ என்ற 100 பந்துகள் கொண்ட போட்டியில் விளையாடி வந்தார். இந்த சூழலில் தனது மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி பென் ஸ்டோக்ஸ் காலவரையற்ற ஓய்வு எடுக்க உள்ளதாக அறிவித்தார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில், ‘பயோ பபுளில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மன ரீதியில் மிகவும் அதிகமாக இருக்கும். ஸ்டோக்ஸ் எடுத்த இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஒரு கிரிக்கெட் வீரராக, அவரது சூழ்நிலையை புரிந்துகொண்டால், ஸ்டோக்ஸ் எடுத்த முடிவில் எந்தவித தவறு இல்லை என்பது தெரியவரும்’ என ரஹானே கூறியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லும் இதேபோல் ஓய்வு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்