‘வெற்றியை தீர்மானிக்க போறவங்க இவங்கதான்’!.. நியூஸிலாந்துக்கு இருக்கும் ஒரு ‘ப்ளஸ்’ பாண்ட்.. விவிஎஸ் லக்‌ஷ்மண் போடும் ‘புது’ கணக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நியூஸிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி கடந்த 3-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. தற்போது அந்நாட்டில் இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நியூஸிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, அங்குள்ள மைதானத்தில் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடினால்தான் அது பழக்கப்படும். ஆனால் நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் முன்கூட்டியே 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், அவர்களுக்கு மைதானம் சுலபமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு அது எளிதானதாக இருக்கும்.

ஆனாலும், இந்திய அணியும் எந்த வகையிலும் சளைத்தது இல்லை. எத்தனை சவால்கள் வந்தாலும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்துவிடுவார்கள். இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கும், திறமைக்கும் ஆஸ்திரேலிய தொடர் ஒரு உதாரணம். இங்கிலாந்தில் அவர்கள் விளையாட உள்ள பயிற்சி ஆட்டங்களே சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என நினைக்கிறேன்’ என விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும், இங்கு பேட்டிங்கை விட பவுலிங்கே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது பலமாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்