‘திடீரென KKR காட்டிய 54 என்ற சிக்னல்’!.. ‘இப்படி பண்ணா யார் வேணாலும் கேப்டன் ஆகலாமே’!.. கலாய்த்து தள்ளிய சேவாக்.. என்ன ‘Code word’ இது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் பெவிலியலின் இருந்து காட்டிய குறியீட்டை சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 21-வது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது, பெவிலியனில் இருந்த கொல்கத்தா அணி நிர்வாகிகள் திடீரென ‘54’ என்ற எண்ணை காட்டினர். இது வர்ணனையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எதற்காக இந்த எண்ணை காண்பித்தனர்? ரகசியமாக கொல்கத்தா கேப்டனுக்கு சுட்டிக் காட்டினார்களா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து Cricbuzz சேனலில் பகிர்ந்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், ‘இப்படிப்பட்ட ரகசிய குறியீடுகளை ராணுவத்தில்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்ட 54 என்ற எண்ணுக்கு அர்த்தம் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பவுலரை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர் என நினைக்கிறேன். அதாவது இந்த சமயத்தில் குறிப்பிட்ட பவுலரை பயன்படுத்துங்கள் என ரகசியமாக தெரிவித்திருக்கலாம்.

பெவிலியனில் இருக்கும் அணி நிர்வாகிகள், களத்தில் இருக்கும் கேப்டனுக்கு இப்படி உதவுவது தவறில்லை. ஆனால் வெளியிலிருந்து போட்டியை இவர்கள் கட்டுப்படுத்தினால், யார் வேண்டுமானாலும் கேப்டனாக இருக்க முடியும். அப்போ இயான் மோர்கனின் உள்ளுணர்வுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அவர் உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என சேவாக் காட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘வெளியில் இருந்து சில உதவிகளை பெறலாம், ஆனால் கேப்டன்தான் எந்த சமயத்தில் யார் பந்து வீச வேண்டு என்பதை நன்கு அறிந்திருப்பவர். அதற்காக வெளி அறிவுரைகளை கேட்க வேண்டாம் என சொல்லவில்லை. சில நேரங்களில் 25-வது வீரரிடமிருந்து கூட நல்ல ஆலோசனை கிடைக்கலாம். கேப்டன் எதையாவது மறந்துவிட்டால், அவருக்கு நினைவுப்படுத்த இதுபோன்ற சீக்ரெட் கோட் பயன்படுத்தினால் தவறில்லை’ என சேவாக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘தோனி, ரோஹித் ஷர்மா போன்ற கேப்டன்கள் தங்களது உள்ளுணர்வைக் கொண்டு செயல்படுகின்றனர். மைதானத்தின் சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் தங்களது முடிவுகளை மாற்றுகின்றனர். குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ஆண்ட்ரே ரசல் பேட்டிங் செய்தபோது, அங்கு ஃபைன் லெக் அல்லது டீப் ஸ்கொயர் லெக் இல்லை. அப்போது 2 வீரர்களை மட்டுமே லெக் சைடு பீல்டிங்கில் நிற்க வைத்துவிட்டு, மற்ற வீரர்களை ஆஃப் சைடு நிற்க வைத்தார். இதை எந்த ஆலோசகரும் உங்களுக்கு சொல்ல மாட்டார்கள். இது அந்த சமயத்தில் தோனியாய் யோசித்து எடுத்த உடனடி முடிவு.

பெவிலியனில் இருந்து உதவிகள் வருவது தவறில்லை, ஆனால் இவற்றை விட களத்தில் இருக்கும் கேப்டனுக்கு தோன்றும் எண்ணங்கள்தான் மிகவும் முக்கியமானவை’ என சேவாக் பகிர்ந்துள்ளார். ஆனாலும் கொல்கத்தா அணியினர் ‘54’ என்ற எண்ணை எதற்காக போட்டியின் நடுவே காண்பித்தனர் என்பதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்