"'கோலி' தான் எல்லாத்துக்கும் 'காரணம்'.. அவர் கொடுத்த அந்த ஒரு 'வாய்ப்பு'.. அது இல்லன்னா கஷ்டம் தான்.." நெகிழ்ச்சியுடன் மனம் திறந்த 'சிராஜ்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இன்று இங்கிலாந்து  சென்றடைந்தது.

மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு அணிகளும், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசுர பலத்துடன் விளங்குவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற, நிச்சயம் இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், இந்த போட்டிக்கான இந்திய அணியில், 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் (Mohammed Siraj), குறிப்பிடத்தக்க வீரராக கருதப்பட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய சிராஜ், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சிறப்பாக பந்து வீசியதால் அதிக கவனம் பெற்றார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், சிராஜிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் களமிறங்கிய சிராஜ், முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதே போல, இனியுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் இவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தனது கிரிக்கெட் பயணத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli) ஏற்படுத்திய தாக்கம் பற்றி, முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார். 'எந்த பிரச்சனை வந்தாலும், விராட் கோலி என்னோடு தான் இருப்பார். 2 வருடங்களுக்கு முன்பு, ஐபிஎல் போட்டிகளில் நான் சிறப்பாக பந்து வீசாத போதும், எனது  திறமை மீது நம்பிக்கை வைத்து, பெங்களூர் அணியில் என்னைத் தக்க வைத்துக் கொண்டார் கோலி. இதற்கு நான் நிச்சயம் நன்றியுள்ளவனாக இருப்பேன்' என சிராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ஆரம்ப கால கிரிக்கெட் பயணம் குறித்து பேசிய சிராஜ், 'மிகவும் பழமையான பஜாஜ் பிளாட்டினா பைக் ஒன்று தான் என்னிடம் இருந்தது. அதில், ஷெல்ப் ஸ்டார்ட், கிக்கர் என எதுவும் இருக்காது. வண்டியைத் தள்ளி தான் ஸ்டார்ட் செய்ய முடியும். நான் பயிற்சியின் போது, மைதானத்திற்கு செல்ல அந்த பைக் தான் பேருதவியாக இருந்தது. இப்போது என்னிடம் விலை மதிப்புள்ள கார்கள் இருந்தாலும், எனது வாழ்க்கை போராட்டத்தின் சின்னமாக அந்த பிளாட்டினா பைக்கை இன்னமும் வைத்துள்ளேன்' என சிராஜ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்