கடைசி நேரத்துல ‘ரோஹித்’ கிட்ட கேப்டன்சியை கொடுக்க என்ன காரணம்..? போட்டி முடிந்தபின் ‘கோலி’ கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடைசி நேரத்தில் ரோஹித் ஷர்மாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தற்கான காரணத்தை விராட் கோலி விளக்கியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 12 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி எதிரணியை சூர்யகுமார் யாதவ் மிரள வைத்தார்.

இதனை அடுத்து கே.எல்.ராகுல் 14 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் (30), ஷ்ரேயாஸ் ஐயர் (37) உள்ளிட்ட வீரர்கள் அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் ஷகர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்த போது திடீரென ரோஹித் ஷர்மாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்துவிட்டு விராட் கோலி வெளியேறினார். இதுகுறித்து போட்டி முடிந்தபின் விளக்கமளித்த கோலி, ‘நான் பந்தை எடுக்க ஓடினேன். அப்போது டைவ் அடித்து பிடித்து, பந்தை வீசினேன். அந்த சமயம் நான் சரியான நிலையில் இல்லை. அதனால் அவுட் ஃபீல்டில் நிற்காமல் உள் வட்டத்துக்குள் வந்து நின்றேன். உடலின் வெப்பநிலை மாறுவதுபோல் உணர்ந்தேன். அதனால் காயத்தை பெரிதாக்க விரும்பவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவிடம் கோலி கேப்டன்சி ஒப்படைக்கும்போது, இங்கிலாந்து அணி வெற்றி பெற 24 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. அப்போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தார். இந்த சமயத்தில் ஷர்துல் தாகூரை பந்துவீச ரோஹித் ஷர்மா அழைத்தார்.

அந்த ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்தில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனும் அவுட்டாகி வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளும் போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்