VIDEO: ‘120% உழைப்பை RCB-க்காக கொடுத்திருக்கிறேன்.. ஆனா...!’ தோல்விக்கு பின் கோலி சொன்ன வார்த்தை.. உடைந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்த பின் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமாக பேசியுள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த கூட்டணி அதிரடியாக விளையாடியது. அப்போது லோக்கி பெர்குசன் வீசிய 6-வது ஓவரில் தேவ்தத் படிக்கல் (21 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து சுனில் நரேன் (Sunil Narine) ஓவரில் கே.எஸ்.பரத் (9 ரன்கள்), விராட் கோலி (39 ரன்கள்), ஏபி டிவில்லியர்ஸ் (11 ரன்கள்), மேக்ஸ்வெல் (15 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 29 ரன்களும், சுனில் நரேன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர். மேலும் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், போட்டி முடிந்தபின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம். மிடில் ஓவர்களில் எங்களின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்தனர். சுனில் நரேன் சிறப்பாக விளையாடினார். அதேபோல் எங்கள் அணியிலும் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. எங்களால் முடிந்தவரை போராடினோம். ஆனால் மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் வந்துவிட்டது.

இந்த ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டனாக ஒரு விஷயத்தை முன்னெடுத்தேன். அதன்படி இளம் வீரர்கள் சுதந்திரத்துடன் விளையாடும் சூழலை ஏற்படுத்த என்னால் முடிந்ததை செய்தேன். இந்திய அணியிலும் அதையே செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என் கேப்டன்ஷிக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது என எனக்கு தெரியவில்லை. ஆனால் 120 சதவீத பங்களிப்பை ஆர்சிபி அணிக்காக கொடுத்துள்ளேன். இனி ஒரு வீரராக அதை தொடர்வேன்’ என விராட் கோலி கூறினார்.

அப்போது ஆர்சிபி அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ஆர்சிபி அணியை புதிய தலைமையின் கீழ் மாற்றி அமைக்க நேரம் வந்துவிட்டது. நான் வேறு எந்த அணிக்காவும் விளையாட மாட்டேன். மற்றவர்கள் நினைப்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஐபிஎல் தொடரில் என்னுடைய கடைசி போட்டி வரை ஆர்சிபி அணிக்காகதான் விளையாடுவேன்’ என விராட் கோலி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். அதன்படி நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிதான் விராட் கோலி கேப்டனாக விளையாடிய கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேப்டனாக ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியாத சோகத்தில் விராட் கோலி கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்