மறுபடியும் இந்திய ஜெர்சியில் ‘தல’ தோனி.. கேப்டன் கோலி என்ன சொன்னார் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2021) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி இன்றைய (18.10.2021) பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது. இதனை அடுத்து வரும் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்த்து தனது முதல் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை (Dhoni), டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக பிசிசிஐ நியமித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் (Virat Kohli) ஐசிசி சார்பில் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக வருவது குறித்து விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘தோனி மீண்டும் அணிக்குள் வருவது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக மட்டுமல்ல, அவர் எப்போதும் எங்களுக்கு ஆலோசகர்தான். இந்திய அணிக்கு நாங்கள் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இப்போதுவரை அவர் ஆலோசகராகதான் இருந்து வருகிறார்.

கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கும் இளம் வீரர்களுக்கு தோனியுடன் கலந்துரையாடுவது உதவியாக இருக்கும். தோனியின் அறிவுரைகள், நுணுக்கங்கள் போட்டி செல்லும் பாதையையே மாற்றிவிடும். தோனி எந்த அணிக்கு கேப்டனாக இருந்தாலும் அவரால் வித்தியாசத்தை புகுத்த முடியும். தோனி அணிக்குள் வருவது உண்மையிலேயே வீரர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையும் அளித்துள்ளது.

கடந்த முறை உலகக்கோப்பை தொடர் எங்களுக்கு மோசமானதாக அமைந்துவிட்டது. ஆனால் இந்த முறை ஏரளமான இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்கள் போட்டியின் முடிவை எந்த நேரத்திலும் மாற்றும் திறன் படைத்தவர்கள். அதனால் வலிமையான அணியாக இருப்பதாக உணர்கிறோம்’ என விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 2007-ம் நடந்த முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்