தோனி சொன்ன அந்த ஒரு விஷயம்.. இன்னும் என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. அப்படி என்னத்த சொல்லியிருப்பாரு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி கூறிய விஷயம் பற்றி, விராட் கோலி தற்போது மனம் திறந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

வரலாறு படைத்த இந்திய அணி

இதனால், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டி தான், தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவுள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற நிச்சயம் இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, செஞ்சுரியன் மைதானத்தில் வரலாறு படைத்திருந்தது.

ரிஷப் பண்ட் மீது விமர்சனம்

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்கவில்லை. அதற்கு பதிலாக, கே எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கினார். இந்த போட்டியில், சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட்டின் பேட்டிங், கடுமையான விமர்சனத்தை உருவாக்கியிருந்தது.

ஒரே ஷாட்டால் வந்த வினை

இதற்கு காரணம், தென்னாப்பிரிக்க  அணிக்கு இலக்கை நிர்ணயிக்கும் வகையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், மூன்றே பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல், அவுட்டாகி ஏமாற்றினார். அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதை எண்ணாத வகையில், ரிஷப் பண்ட் அடித்த ஷாட் தான், பெரும் விமர்சனத்தை உண்டு பண்ணியிருந்தது.

சீனியர் வீரர்கள் காட்டம்

அதாவது, தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே, பொறுமையாக ஆட முயலாமல், கிரீஸை விட்டு வெளியே இறங்கி, அடித்து ஆட முயன்றார். இதனால், அவர் உடனடியாக அவுட்டானார். இக்கட்டான சூழ்நிலையில், மெதுவாக ஆடி ரன்கள் சேர்க்காமல், அவர் அதிரடி காட்ட நினைத்ததைப் பற்றி தான், பல முன்னாள் வீரர்கள், பண்ட்டை விமர்சனம் செய்திருந்தனர்.

கோலி சொல்வது என்ன?

இந்நிலையில், நாளைய டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். மேலும், அவர் நாளைய போட்டியில் களமிறங்குவதையும் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து, பண்ட்டின் ஆட்டத்தின் மீதான விமர்சனம் பற்றி பேசிய கோலி, 'பயிற்சியின் போது நாங்கள் பண்ட்டிடம் உரையாடினோம். பொதுவாக, ஒரு பேட்ஸ்மேன் ஆடும் ஷாட் சிறந்ததா இல்லையா என்பதை மற்றவர்கள் அறிவதற்கு முன்னர் அந்த பேட்ஸ்மேன் தான் அறிந்து கொள்வார். அத்தகைய நேரத்தில், அந்த வீரரின் மனநிலை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தோனி சொன்ன விஷயம்

அனைவரும் அவருடைய கரியரில் நிச்சயம் தவறுகளை செய்திருப்போம். அதே போல, தான் ரிஷப் பண்ட்டும். எம்.எஸ். தோனி முன்பு என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அதாவது, நாம் ஒரு முறை தவறு செய்தால், அடுத்த தவறை குறைந்தது 7 முதல் 8 மாத கால இடைவெளிக்கு பிறகு செய்ய வேண்டும். அப்போது தான் நமது கிரிக்கெட் பயணத்தில், நாம் அதிக காலம் நிலைத்து நிற்க முடியும் என கூறுவார்.

தோனி அன்று கூறிய அறிவுரை, அப்படியே என் மனதில் தங்கி விட்டது. இப்போதைய நேரத்தில் நான் அதைத் தான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்' என பண்ட்டிற்கு ஆதரவாக கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

VIRAT KOHLI, MS DHONI, RISHABH PANT, IND VS SA, ரிஷப் பண்ட், எம்.எஸ். தோனி, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்