VIDEO: ‘பேசாம நீங்க சிஎஸ்கேவுக்கே வந்திருங்க கோலி’!.. மேட்ச் தோத்த சோகத்திலும் மனுஷன் செஞ்ச செயல்.. உருகும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தபின் விராட் கோலி செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரில் 35-வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டிய இந்த ஜோடி 50 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து 100 ரன்களுக்கு பார்டன்ர்ஷிப் அமைத்து அசத்தியது. இதில் விராட் கோலி 53 ரன்களும், தேவ்தத் படிக்கல் 70 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்த அந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.1 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், அம்பட்டி ராயுடு 31 ரன்களும், டு பிளசிஸ் 31 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில் இரண்டாவது தோல்வியை பெங்களூரு அணி சந்தித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதனால் சென்னைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் (விராட் கோலி-தேவ்தத் படிக்கல்) 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனால் 200 ரன்களுக்கு மேல் ரன்கள் அந்த அணி எடுக்க வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டது. ஆனால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொதப்பவே, 156 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. மேலும் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின், சிஎஸ்கே கேப்டன் தோனி சக வீரர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது வந்த விராட் கோலி, தோனியை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தார். இதனை அடுத்து இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

போட்டியில் தோல்வி அடைந்த சோகம் இருந்தாலும், கோலியின் இந்த செயல் சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ‘தோனி மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் நீங்கள் பேசாமல் சிஎஸ்கே அணிக்கு வந்துவிடுங்கள்’ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்