தினேஷ் கார்த்திக்கு நடந்தது மாதிரி விராட் கோலிக்கும் நடக்க போகுதா..? அப்போ ஆர்சிபிக்கு அடுத்த ‘கேப்டன்’ இவர்தானா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி முன்பே விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன், டி20 இந்திய அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வேலைப்பளு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதனை அடுத்து நடப்பு ஐபிஎல் (IPL) தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

இதுவரை விராட் கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை. லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அந்த அணி, ப்ளே ஆஃப் போன்ற முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருகிறது. அதனால் அரையிறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெறாமல் ஒவ்வொரு முறையும் பெங்களூரு அணி வெளியேறி வருகிறது. இதனால் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 92 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. அதனால் அப்போது கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (SRH), தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. அதனால் இந்த தொடரின் பாதியில் டேவிட் வார்னரை கேப்டன் பொறுப்பில் இருந்து ஹைதராபாத் அணி நிர்வாகம் நீக்கியது. இதனை அடுத்து கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதேபோல் விராட் கோலியும் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் பெங்களூரு அணிக்கு அடுத்த கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலிக்கு பிறகு அந்த அணியில் அதிக அனுபவம் உள்ள வீரராக ஏபி டிவில்லியர்ஸ் திகழ்ந்து வருகிறார். அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லும் (Glenn Maxwell) இந்த பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்